/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/lorry (2)_0.jpg)
வட்டார போக்குவரத்து அலுவலகங்களின் புதிய உத்தரவால், மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகளுக்கு தகுதிச்சான்று (எப்சி) கிடைப்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பழகுநர் உரிமம் (எல்எல்ஆர்), ஓட்டுநர் உரிமம் (டிரைவிங் லைசென்ஸ்) பர்மிட், வாகனப்பதிவு உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன. கரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து விதமான பொது போக்குவரத்து சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, தற்போது பேருந்து, கார், வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் லாரி உள்ளிட்ட கனரக சரக்கு வாகனங்களை இயக்க வாகன தகுதிச்சான்று பெறுவதில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது, இலகுரக மற்றும் கனரக வாகனங்கள், பதிவு பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது அவ்வாகனங்களைச் சுற்றிலும் சிவப்பு நிறத்தில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்க வேண்டும் என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஒளிரும் ஸ்டிக்கரை, பெங்களூருவில் உள்ள ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடம் இருந்துதான் வாங்க வேண்டும் என்றும் வாய்மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறையால் சரக்கு லாரி உரிமையாளர்கள் ஏற்கனவே தங்கள் தரப்பு அதிருப்தியை தெரிவித்து இருப்பதோடு, இந்த புதிய நடைமுறையை ரத்து செய்யவும் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவப்பு நிற ஒளிரும் ஸ்டிக்கர்களை வாங்குவதற்கு ஆக. 19- ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
கரோனா ஊரடங்கால் சரக்கு போக்குவரத்தும் பெரிய அளவில் முடங்கியுள்ள நிலையில், கடுமையான வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளதாக லாரி அதிபர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், குறிப்பிட்ட நிறுவனத்திடம் இருந்துதான் ஒளிரும் ஸ்டிக்கர்களை பெற வேண்டும் என்பது கூடுதல் செலவு பிடிக்கும் சமாச்சாரம் என்றும் கூறுகின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dha_1.jpg)
இது தொடர்பாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொருளாளர் தனராஜ் நம்மிடம் பேசினார். அப்போது அவர், “ஊரடங்கால் சரக்கு லாரிகளை நிறுத்தி வைத்திருக்கிறோம். ஓடாத லாரிகளுக்கு ஏப்ரல்- ஜூன் வரையிலான காலாண்டு வரி செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வாகனத்தை சுற்றிலும் சிவப்பு நிற ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும் என்றும், அதையும் குறிப்பிட்ட நிறுவனத்திடம் இருந்துதான் வாங்க வேண்டும் என்றும் அரசு நிர்ப்பந்தம் செய்வதை ஏற்க முடியாது.
இந்த புதிய உத்தரவால், தமிழ்நாடு முழுவதும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள் தகுதிச்சான்று பெற முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அரசின் புதிய புதிய உத்தரவால் லாரி அதிபர்களுக்கு கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளது. அதனால், சுமை ஏற்பட்டுள்ளதால், அரசு புதிய நடைமுறையை உடனடியாக கைவிட வேண்டும்,'' என்கிறார் தனராஜ்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)