Good news for college professors Minister Govi ​​Chezhian

தமிழ்நாடு அரசின் கல்லூரிக் கல்வி, தொழில் நுட்பக் கல்வி ஆசிரியர்களுக்குப் பணி இட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடைபெறும் என உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு அரசு கல்லூரிக் கல்வித் துறையின்கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறையின்கீழ் இயங்கி வரும் அரசு பொறியியற் கல்லூரிகள்,அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிகள், அரசினர் சிறப்புப் பயிலகங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் ஆசிரியர்களிடமிருந்து பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடைபெற வேண்டுமென அரசுக்குக் கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன.

Advertisment

ஆசிரியர்களின் இந்தக் கோரிக்கைகளைப் பரிவுடன் ஏற்று, நடப்பு ஆண்டில் மேற்கண்ட துறைகளின்கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்குப் பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வினை வெளிப்படைத் தன்மையுடன் இணைய வழியின் வாயிலாக மேற்கொள்ளலாம் என அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, கல்லூரிக் கல்வித் துறையின்கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறையின்கீழ் இயங்கும் அரசினர் பொறியியற் கல்லூரிகள், அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிகள், அரசினர் சிறப்புப் பயிலகங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் ஆசிரியர்கள் இந்த கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம்.

Advertisment

எனவே 2024-25ஆம் கல்வி ஆண்டிற்கான பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வினை (counseling) உரிய நெறிமுறைகளைப் பின்பற்றி 25.11.2024க்குள்ளாக வெளிப்படைத் தன்மையுடன் இணையவழியின் வாயிலாக மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். அதற்கிணங்க இணையவழியாகப் பெறப்படுகின்ற ஆசிரியர்களின் மாறுதல் விண்ணப்பங்கள் உரிய விதிகளின்படி பரிசீலனை செய்யப்பட்டு ஆணைகள் வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.