வட்டியில்லாமல் நகைக் கடன் வழங்குவதாகக் கூறி, சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை அடமானம் வைத்தவர்களுக்கு திருப்பி வழங்காமல் மோசடி செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரூபி ஜுவல்லர்ஸ் நிறுவன உரிமையாளர் சையது ரஹ்மானுக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மேற்கு மாம்பலத்தில் செயல்பட்டு வந்த ரூபி ஜிவல்லர்ஸ் என்ற நிறுவனம், தங்க நகைகளுக்கு வட்டி இல்லாமல் கடன் வழங்கப்படும் என அறிவித்ததை நம்பி, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், 300 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றிருந்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Ruby Jewellers.jpg)
கடனை செலுத்தி நகையை மீட்கச் சென்ற போது, நகையை திருப்பி வழங்கவில்லை. இதுசம்பந்தமாக, அடமானம் வைத்தவர்கள் சென்னைகாவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப் பிரிவு, ரூபி ஜுவல்லர்ஸ் உரிமையாளர் சையது ஹிப்சுர் ரஹ்மான் பியாபானி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையில், தன்னை திவால் ஆனவர் என அறிவிக்கக் கோரி சையது ரஹ்மான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, விசாரணைக்கு ஆஜராகும்படி, பல முறை அவருக்கு உத்தரவிட்டும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவரை கைது செய்து ஆஜர்படுத்தும் வகையில், பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும்படி, காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நவம்பர் 19 ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/chennai high court_5.jpg)
இதேபோல, இந்த மோசடி தொடர்பாக பதிவு செய்துள்ள வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றக் கோரி வஜீஹா என்ற பெண் தாக்கல் செய்த மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.
Follow Us