ADVERTISEMENT

கோகுல்ராஜ் கொலை வழக்கில் திடீர் திருப்பம்; அரசுத்தரப்பு வழக்கறிஞராக ப.பா.மோகன் நியமனம்!

08:09 AM Dec 21, 2018 | elayaraja

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக அரசுத்தரப்பு வழக்கறிஞராக பிரபல வழக்கறிஞரான பவானியைச் சேர்ந்த பா.மோகனை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் சித்ரா. இவருடைய மகன் கோகுல்ராஜ் (23). பி.இ. பட்டதாரி. கடந்த 23.6.2015ம் தேதியன்று நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்த தன்னுடன் படித்து வந்த தோழி சுவாதியைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தார். அன்று இரவு அவர் வீடு திரும்பவில்லை.

மறுநாள் அவர் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகில் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அவர் கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதியை காதலிப்பதாக கருதிய ஒரு கும்பல்தான், அவரை ஆணவக்கொலை செய்திருக்க வேண்டும் என்று அப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி போலீசார், சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை கைது செய்தனர். வழக்கு விசாரணையின்போது கைதானவர்களில் ஜோதிமணி என்பவர் கொல்லப்பட்டார். அமுதரசு என்பவர் தலைமறைவாகிவிட்டார்.

இந்த வழக்கில் அரசுத்தரப்பில் 110 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். சாட்சிகள் விசாரணை 30.8.2018ம் தேதி தொடங்கியது. நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்னிலையில் விசாரணை நடந்து வருகிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து வழக்குகளில் ஆஜராகி வரும் பவானியைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞரான பா.மோகனை, இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்க வேண்டும் என்று கோகுல்ராஜின் தாயார் சித்ரா, உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதற்கிடையே, சாட்சிகள் விசாரணை தொடங்கியதால், அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞராக சேலத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கருணாநிதியை நியமித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் உத்தரவிட்டார். அவர் பிரபலமான வழக்குகளை வாதாடிய அனுபவம் இல்லாதவர் என்பதால், அவருக்கு உதவியாக இருக்க வழக்கறிஞர் நாராயணன் என்பவரை இணைத்துக்கொள்ள கோகுல்ராஜ் தரப்பினர் விசாரணை நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனர்.

எதிரிகள் தரப்பில் மதுரையைச் சேர்ந்த பிரபல மூத்த வழக்கறிஞர் ஜி.கே. என்கிற கோபாலகிருஷ்ண லட்சுமணராஜூ, ஆறு உதவி வழக்கறிஞர்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார். அரசுத்தரப்பு சாட்சிகளிடம் நீதிமன்ற அரங்கிலேயே மிரட்டுவதுபோல் உருட்டல் மிரட்டலாக கேள்விகள் கேட்பதில் அவர்களே முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்த சம்பவங்களும் அரங்கேறின.

எதிர்தரப்பு வழக்கறிஞருக்கு இணையாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் ஆவேசம் காட்டாமல் மென்மையான போக்கைக் கடைப்பிடித்து வருவது, சிபிசிஐடி தரப்பிலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இது ஒருபுறம் இருக்க, சித்ராவின் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பவானி பா.மோகனை அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞகராக நியமிக்கலாம் கடந்த 18.11.2018ம் தேதி உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவின் 'வெப் காப்பி' எனப்படும் இணையதள நகலே கடந்த 12.12.2018ம் தேதிதான் மனுதாரர்களுக்கு கிடைத்தது.

உயர்நீதிமன்றத்தின் இதற்கான மூல உத்தரவுக்கடிதம் கிடைத்ததை அடுத்து, பவானி பா.மோகனை அரசுத்தரப்பு வழக்கறிஞராக நியமித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் 18.12.2018ம் தேதியன்று உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, இந்த வழக்கில் அரசுத்தரப்பு சாட்சியும், கொலையுண்ட கோகுல்ராஜின் நண்பருமான வழக்கறிஞர் ராசா.பார்த்திபன், சிபிசிஐடி காவல் ஆய்வாளர் பிருந்தா, கோகுல்ராஜின் தாயார் சித்ரா, அவருடைய அண்ணன் கலைச்செல்வன் ஆகியோர் ஆட்சியரின் உத்தரவு நகல், வழக்கின் கோப்புகள், இதுவரை சாட்சியம் அளித்தவர்களின் விவரங்கள், வாக்குமூல ஆவண நகல்களை வழக்கறிஞர் ப.பா.மோகனை நேரில் சந்தித்து வழங்கினர்.

இதுகுறித்து வழக்கறிஞர் ப.பா.மோகனிடம் கேட்டபோது, ''வழக்கு ஆவணங்களை முழுமையாக படிக்க கொஞ்சம் அவகாசம் தேவைப்படுகிறது. இந்த வழக்கில் நீதி பெற்றுத்தரப்படும்,'' என்றார்.

அரசுத்தரப்பு வழக்கறிஞர் மாற்றப்பட்டது இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. அடுத்தக்கட்ட சாட்சிகள் விசாரணை வரும் ஜனவரி 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்று, வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆஜராகி சாட்சிகளிடம் விசாரணையை நடத்துவார் எனத்தெரிகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT