Skip to main content

கோகுல்ராஜ் கொலை வழக்கின் தண்டனை விவரங்கள்!

Published on 08/03/2022 | Edited on 08/03/2022

 

Gokulraj incident case court judgement

 

சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுவாதியும் காதலித்து வந்த நிலையில் 2015- ஆம் ஆண்டு ஜூன் 23- ஆம் தேதி கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற கோகுல்ராஜ், இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், அவரின் பெற்றோர் தேட ஆரம்பித்தனர். மறுநாள், நாமக்கல் அருகே உள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாக பிணமாகக் கிடந்த கோகுல்ராஜின் நாக்கும் துண்டிக்கப்பட்டிருந்தது. குற்றவாளிகளைத் தண்டிக்காமல் உடலை வாங்கமாட்டோம் என மறுத்து, 2015 ஆம் ஆண்டு ஜூன் 25- ஆம் தேதி கோகுல்ராஜின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மரண வழக்கை விசாரிக்க திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா கடந்த 2015- ஆம் ஆண்டு செப்.15- ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 பேருக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தையே உலுக்கிய கோகுல்ராஜ் கொலை சம்பவம் தொடர்பாக பலகட்டங்களாக விசாரணை நடைபெற்ற நிலையில் கைது செய்யப்பட்ட 17 பேரில் பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் மற்றும் அவரது மனைவி ஜோதிமணி இறந்துவிட்டனர். இதுவரை இந்த வழக்கு தொடர்பாக 116 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. இந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த மாதம் பிப்.9 - ஆம் தேதி முடிந்த நிலையில் மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கில் கடந்த மார்ச் 5- ஆம் தேதி  தீர்ப்பு வாசிக்கப்பட்டது. அதில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள். இந்த 10 பேருக்கான தண்டனை விபரம் வரும் மார்ச் 8- ஆம் தேதி அன்று வெளியிடப்படும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அத்துடன் இவ்வழக்கில் இருந்து 5 பேர் விடுவிக்கப்பட்டனர்.

 

இந்நிலையில், மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார் இன்று (08/03/2022) இவ்வழக்கின் தண்டனை விவரங்களை அறிவித்தார். அதன்படி, வழக்கின் முதல் குற்றவாளியான யுவராஜுக்கு மூன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2வது குற்றவாளியான யுவராஜின் கார் ஓட்டுநர் அருணுக்கு ஆயுள் முழுவதும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 13வது குற்றவாளியான பிரபு, 14வது குற்றவாளியான கிரிதர் ஆகிய இருவருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடுதலாக 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையுடன் ரூபாய் 5,000 அபராதம் விதிக்கப்பட்டது. சந்திரசேகரனுக்கு ஒரு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளான குமார், சதீஸ்குமார், ஸ்ரீதர், ரஞ்சித், ரகு, செல்வராஜ் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், இவ்வழக்கின் குற்றவாளிகள் 10 பேருக்கும் ஆயுள் தண்டனை, அனைவரும் சாகும் வரை சிறையில் அடைக்க ஆணையிடப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேங்கைவயல் விவகாரம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
The vengaivayal Affair Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20 நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி முதல் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள புதுகோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. 

Next Story

யோகா மாஸ்டர் அடித்து கொலை; விசாரணையில் பகீர்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

கராத்தே மாஸ்டர் காணாமல் போன சம்பவத்தில், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது  சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலுள்ள கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் அந்த பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கராத்தே மாஸ்டராகவும், யோகா மாஸ்டராகவும் பணியாற்றி வந்தார். இவரிடம் பல்வேறு குழந்தைகள் கராத்தே மற்றும் யோகா பயிற்சிகள் எடுத்து வந்த நிலையில் கராத்தே மாஸ்டர் லோகநாதனை கடந்த 13ஆம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்ததோடு காணாமல்போன லோகநாதன் தேடி வந்தனர். லோகநாதன் வைத்திருந்த செல்போனில் அவருடன் இறுதியாக பேசியது யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர் காரனை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் -கஸ்தூரி தம்பதியிடம் செல்போனில் பேசியது தெரியவந்தது.

சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்த விசாரித்தபோது யோகா மாஸ்டர் லோகநாதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட பகீர் தகவல் வெளிவந்தது. செம்மஞ்சேரி பூங்காவில் வைத்து லோகநாதன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கராத்தே, யோகா பயிற்சிகளை  கொடுத்து வந்த நிலையில் சுரேஷ்-கஸ்தூரி தம்பதியின் 11 வயது மகன் லோகநாதனிடம் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டு பயிற்சி எடுத்து வந்தான். அதே நேரம் கஸ்தூரியும் அவரிடம் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

இந்நிலையில் கஸ்தூரியிடம் லோகநாதன் பாலியல் ரீதியாக தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் லோகநாதனின் பயிற்சி வகுப்புக்கு செல்வதை கஸ்தூரி தவிர்த்து வந்துள்ளார். ஆனால் இருப்பினும் மொபைல் மூலம் கஸ்தூரியை தொடர்பு கொண்ட லோகநாதன் யோகா வகுப்புக்கு வரும்படி தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கஸ்தூரி இதுகுறித்து கணவரிடம் தெரிவிக்க இருவரும் சேர்ந்து கராத்தே மாஸ்டர் லோகநாதன் கொலை செய்ய திட்டமிட்டனர்.

அவரை மொபைல் மூலம் தொடர்புகொண்டு காரனை பகுதிக்கு வரவழைத்து அடித்து கொலை செய்ததோடு அங்குள்ள பாழடைந்த கிணற்றில் உடலை வீசிவிட்டுச் சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் இருந்த லோகநாதனின் உடலை கயிறு மூலம் கட்டி வெளியே கொண்டு வந்தனர். யோகா மாஸ்டர் அடித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.