Skip to main content

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு; நீதிபதிகள் மலைக்கோயிலில் நேரில் ஆய்வு!

 

Gokulraj case judges inspected in thiruchankodu temple

 

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில், சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் சரியாக ஆய்வு செய்யப்படவில்லை என எதிர்த்தரப்பு வாதிட்டதை அடுத்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 22) நேரில் ஆய்வு செய்தனர்.

 

சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த சித்ராவின் மகன் கோகுல்ராஜ் (23). பி.இ., பட்டதாரி. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவர், கடந்த 23.6.2015 அன்று வீட்டைவிட்டுச் சென்றவர் இரவாகியும் வீடு திரும்பவில்லை. மறுநாள் மாலை நாமக்கல் மாவட்டம், கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜின் சடலம் கிடந்தது தெரியவந்தது.

 

திருச்செங்கோட்டில் உள்ள கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் கோகுல்ராஜ் படித்து வந்தார். அவருடன் படித்து வந்த கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதி என்பவரை காதலித்து வந்தார். இந்த விவகாரத்தில் கோகுல்ராஜ் ஆணவக்கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. 

 

Gokulraj case judges inspected in thiruchankodu temple

 

இந்த வழக்கை நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். கோகுல்ராஜை ஆணவக்கொலை செய்ததாக சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனத் தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

கைதானவர்களில் சந்திரசேகரன், அவருடைய மனைவி ஜோதிமணியும் அடங்குவர். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராற்றில் சந்திரசேகர் தனது மனைவியை சுட்டுக்கொன்று விட்டார். அதேபோல், கைதானவர்களுள் ஒருவரான அமுதரசு என்பவர் பிணையில் வெளியே சென்றவர் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து ஜோதிமணி, அமுதரசு நீங்கலாக மற்ற 15 பேர் மட்டுமே வழக்கு விசாரணையின்போது தொடர்ந்து ஆஜராகி வந்தனர்.

 

ஆரம்பத்தில் நாமக்கல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. பின்னர் மதுரை மாவட்ட வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது.  இந்த வழக்கில் கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. முதல் குற்றவாளியான யுவராஜ், கார் ஓட்டுநர் அருண், குமார், சதீஸ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரி என்கிற கிரிதர் ஆகிய 10 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி சம்பத்குமார் தீர்ப்பு அளித்தார்.

 

யுவராஜின் தம்பி தங்கதுரை, சங்கர், அருள் செந்தில், செல்வகுமார், சுரேஷ் ஆகிய 5 பேர் மீதான குற்றச்சாட்டுகள் சரிவர நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி விடுதலை செய்யப்பட்டனர். குற்றவாளிகளுக்கு 8.3.2022ம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, யுவராஜ்-க்கு மூன்று ஆயுள் தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. இறுதிமூச்சு வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி சம்பத்குமார் தனது தீர்ப்புரையில் கூறியிருந்தார்.

 

மேலும் அருண், குமார் என்கிற சிவகுமார், சதீஸ்குமார், ரகு என்கிற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ் ஆகிய 6 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அதேபோல் பிரபு, கிரிதர் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இத்துடன் கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது பொய் சாட்சியம் ஆகிய குற்றங்களுக்காக இவர்களுக்கு கூடுதலாக தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்தார். மற்றொரு குற்றவாளியான சந்திரசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.

 

இந்த வழக்கில், 5 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கோகுல்ராஜ் தாயார் தரப்பிலும் சி.பி.சி.ஐ.டி. தரப்பிலும் உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி யுவராஜ் தரப்பும் மேல்முறையீடு செய்துள்ளனர்.

 

இது ஒருபுறம் இருக்க, இந்த வழக்கில் முக்கிய சாட்சியான சுவாதி திடீரென்று பிறழ்சாட்சியாக மாறினார். நீதிமன்ற விசாரணையின்போது 23.6.2015ம் தேதியன்று திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு கோகுல்ராஜூடன் சென்றதாக காட்டப்படும் காட்சியில் தெரியும் பெண் நான் அல்ல என்று தடாலடியாக கூறினார்.  எனினும், அறிவியல்பூர்வமான ஆதாரங்கள், சம்பவம் நடந்த சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு யுவராஜ் தரப்புக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

 

இந்நிலையில், பிறழ்சாட்சியம் அளித்த குற்றத்திற்காக அவர் மீது சி.பி.சி.ஐ.டி. தரப்பு ஒரு வழக்கை தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணையின்போதும் சுவாதி, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் நீதிமன்றமே அவர் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. 

 

Gokulraj case judges inspected in thiruchankodu temple

 

வழக்கு விசாரணை பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் பதிவான சி.சி.டி.வி. காட்சிகளை காவல்துறையினர் சரிவர ஆய்வு செய்யவில்லை என யுவராஜ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

 

அப்போது திருச்செங்கோடு கோயிலில் மொத்தம் 8 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்ததாகவும், அதில் 2 கேமராக்களில் இருந்த காட்சிகளை மட்டுமே ஆய்வு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் கோகுல்ராஜ் கடைசியாக இருந்த இடங்களில் உள்ள சி.சி.டி.வி.க்களை ஆய்வு செய்ய நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், எம்.எஸ். ரமேஷ் ஆகியோர் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 22) நேரில் ஆய்வு செய்தனர்.

 

சம்பவத்தன்று கோகுல்ராஜூம், சுவாதியும் எந்த வழியாக கோயிலுக்குள் நுழைந்தனர்? எந்த இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்? கோகுல்ராஜை எந்த இடத்திலிருந்து யுவராஜ் தரப்பினர் கடத்திச் சென்றனர்? என்பதை விசாரணை அதிகாரியான காவல்துறை எஸ்.பி. ஸ்டாலின் விளக்கி கூறினார். அந்த இடங்களை நீதிபதிகள் நேரில் பார்வையிட்டதோடு, புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.

 

கோயிலின் மேற்கு நுழைவு வாயில், ராஜகோபுரம், கொடிமரம் உள்ளிட்ட இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களையும் ஆய்வு செய்தனர். கோயிலுக்குள் நுழையும் நான்கு வழிகளையும் பார்வையிட்டனர். இதில் கிழக்கு நுழைவு வாயில் எப்போதும் பூட்டப்பட்டு இருக்கும். உச்சிப்பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் பாதை வழியாக கார் செல்ல முடியுமா? என்றும் விசாரித்தனர்.

 

சம்பவத்தன்று கோகுல்ராஜ் கோயிலுக்குள் நுழைவது, தரிசனம் செய்வது, யுவராஜூடன் இருப்பது போன்ற வீடியோ பதிவுகளையும் பார்வையிட்டனர். சுமார் 3 மணி நேரம் இந்த ஆய்வு நடந்தது. அப்போது கோகுல்ராஜின் தாயார் சித்ரா, யுவராஜின் மனைவி சுவீதா, அவர் தரப்பு வழக்கறிஞர்கள் உடன் இருந்தனர். 

 

Gokulraj case judges inspected in thiruchankodu temple

 

அதேபோல் கோகுல்ராஜின் சடலம் கிடந்த கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில் தண்டவாள பகுதியிலும் பார்வையிட்டனர். விசாரணை அதிகாரி சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி., ஸ்டாலின், சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. கிருஷ்ணன் ஆகியோரிடமும் நீதிபதிகள் சில விவரங்களை கேட்டறிந்தனர்.

 

ஆய்வுக்கு வந்த நீதிபதிகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி, உதவி ஆணையர் ரமணி காந்தன், கோட்டாட்சியர் கவுசல்யா ஆகியோர் வரவேற்றனர். அதே நேரம், அர்ச்சகர்களின் பூரணகும்ப மரியாதையையும் கடவுள் தரிசனத்தையும் தவிர்த்தனர். 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !