Skip to main content

கோகுல்ராஜ் கொலை வழக்கு; மீண்டும் சுவாதியை விசாரிக்க நீதிமன்றம் முடிவு

Published on 24/11/2022 | Edited on 24/11/2022

 

nn

 

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் பி.இ. பட்டதாரி. பட்டியலினத்தைச் சேர்ந்த இவர், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த உடன் படித்து வந்த சுவாதி என்பவரை காதலித்து வந்தார். சுவாதி கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். இதையறிந்த சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட கும்பல், கடந்த 23.6.2015ம் தேதி திருச்செங்கோடு மலைக்கோயிலில் வைத்து கோகுல்ராஜை கடத்திச் சென்று கொலை செய்தனர். தலை வேறு உடல் வேறாக நாமக்கல் கிழக்கு தொட்டிப்பாளையம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் வீசிவிட்டுச் சென்றுவிட்டனர்.

 

கோகுல்ராஜை கொலை செய்ததாக யுவராஜ், அருண், குமார் என்கிற சிவகுமார், சங்கர், அருள் செந்தில், செல்வகுமார், தங்கதுரை, சதீஸ்குமார், ரகு என்கிற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர், சுரேஷ் ஆகிய 15 பேரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர்.

 

இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட எஸ்.சி, எஸ்.டி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் கடந்த மார்ச் 5ம் தேதி தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது, யுவராஜ் உள்ளிட் பத்து பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டது. அவர்களுக்கான தண்டனை விவரங்கள் மார்ச் 8ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் குற்றவாளியான யுவராஜிக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.

 

யுவராஜின் கார் ஓட்டுநர் அருண், குமார் என்கிற சிவகுமார், சதீஸ்குமார், ரகு என்கிற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ் ஆகியோருக்கு 2 ஆயுள் தண்டனையை சாகும் வரை சிறையில் அனுபவிக்கவும் தீர்ப்பு அளிக்கப்பட்டது. சந்திரசேகரன், பிரபு மற்றும் கிரிதருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

nn

 

இது ஒருபுறம் இருக்க, தண்டனை பெற்ற யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் தண்டனையை ரத்து செய்யக்கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்தனர். மேலும், தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

 

இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் இருதரப்பு வாதங்களும் வைக்கப்பட்டது. இன்று இந்த வழக்கில் நீதிபதிகள் 'கீழமை நீதிமன்றத்தின் விசாரணை அறிக்கையை பார்க்கும் பொழுது விசாரணையின் தொடக்க காலத்தில் சுவாதி நட்சத்திர சாட்சியாக இருந்துள்ளார். ஆனால் திடீரென பிறழ் சாட்சியாக மாறிவிட்டார். இதனைக் கீழமை நீதிமன்றமும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மேல்முறையீட்டு நீதிமன்றம் துறவிகளைப் போல தவறுக்கு எதிராக சமநிலையைப் பேண இயலாது. நீதித்துறை மனசாட்சியை திருப்திப்படுத்தும் வகையில் நீதிமன்றம் தானாக முன்வந்து சுவாதியை மீண்டும் சாட்சியாக விசாரிக்க விரும்புகிறது. நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் போதுமான காவல்துறை பாதுகாப்பை சுவாதிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் வழங்க வேண்டும். சுவாதியின் சாட்சியமானது கட்டாயம் தேவையானது. தவறினால் நீதித்துறையின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிடும் எனத் தோன்றுகிறது. எனவே அவரை தகுந்த போலீஸ் பாதுகாப்புடன் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்' என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.