Advertisment

கோகுல்ராஜ் கொலை வழக்கில் அப்பீல் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

Gokulraj case convicts' appeal adjourned

கோகுல்ராஜ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற யுவராஜ் உள்ளிட்டோர் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் ஜூன் 6ம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Advertisment

சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ். பி.இ. பட்டதாரி. பட்டியலினத்தைச் சேர்ந்த இவர், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த உடன் படித்து வந்த சுவாதி என்பவரை காதலித்து வந்தார். சுவாதி, கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். இதையறிந்த, சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட கும்பல், கடந்த 23.6.2015ம் தேதி திருச்செங்கோடு மலைக்கோயிலில் வைத்து கோகுல்ராஜை கடத்திச்சென்று கொலை செய்தனர். தலை வேறு உடல்வேறாக நாமக்கல் கிழக்கு தொட்டிப்பாளையம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் வீசிவிட்டுச் சென்றுவிட்டனர்.

Advertisment

கோகுல்ராஜை கொலை செய்ததாக யுவராஜ், அருண், குமார் என்கிற சிவகுமார், சங்கர், அருள்செந்தில், செல்வகுமார், தங்கதுரை, சதீஸ்குமார், ரகு என்கிற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர், சுரேஷ் ஆகிய 15 பேரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட எஸ்.சி, எஸ்.டி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் கடந்த மார்ச் 5ம் தேதி தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது, யுவராஜ் உள்ளிட் பத்து பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டது. அவர்களுக்கான தண்டனை விவரங்கள் மார்ச் 8ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் குற்றவாளியான யுவராஜிக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.

யுவராஜின் கார் ஓட்டுநர் அருண், குமார் என்கிற சிவகுமார், சதீஸ்குமார், ரகு என்கிற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ் ஆகியோருக்கு 2 ஆயுள் தண்டனையை சாகும் வரை சிறையில் அனுபவிக்கவும் தீர்ப்பு அளிக்கப்பட்டது. சந்திரசேகரன், பிரபு மற்றும் கிரிதருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இது ஒருபுறம் இருக்க, தண்டனை பெற்ற யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் தண்டனையை ரத்து செய்யக்கோரி, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்தனர். மேலும், தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

நீதிபதிகள் சுப்ரமணியன், சதீஸ்குமார் ஆகியோர் முன்பு யுவராஜ் தரப்பு தாக்கல் செய்த மனு திங்கள் கிழமை (ஏப். 11) விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி தரப்பில், பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து மனு மீதான விசாரணையை ஜூன் 6ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

gokulraj madurai Yuvaraj
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe