/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/thiruma-std-1_0.jpg)
கோகுல்ராஜ் படுகொலை வழக்கில் தண்டனையின்றி விடுவிக்கப்பட்ட ஐவருக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்யவேண்டும். சிறப்பு வழக்கறிஞர் ப.பா.மோகனுக்கு உரிய ஊதியமும் பாதுகாப்பும் வழங்க வேண்டும். கொலைக் குற்றவாளியின் சாதி சங்கத்தைத் தடை செய்யவேண்டும் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “கோகுல்ராஜ் படுகொலை வழக்கில் குற்றவாளிகளுக்குச் சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தண்டனைகள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மிகுந்த ஆறுதல் அளிப்பதாகவுள்ளது. எனவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். அதேவேளையில், சிறப்பு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட ஐந்து பேரின் விடுதலையை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக மிகச் சிறப்பான முறையில் வாதாடி குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தந்த மூத்த வழக்கறிஞர் ப.பா. மோகனைப் பாராட்டுகிறோம்.
கோகுல்ராஜ் படுகொலை வழக்கில் தண்டனை வழங்கியுள்ள சிறப்பு நீதிமன்றம் முதல் குற்றவாளிக்கு மூன்று ஆயுள் தண்டனைகளை விதித்து சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. முதல் குற்றவாளி மீது ஏற்கனவே குற்றம் இருக்கிறதா என ஆராய்ந்து அவர் மீதான வழக்குகளில் அவர் தண்டனை எதுவும் வழங்கப்படாததை சுட்டிக்காட்டியுள்ள நீதிமன்றம், அவரது கெட்ட நடத்தையைக் காட்ட வேறு ஆவணங்கள் எதுவும் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே இவ்வழக்கு சம்பவம் நடந்த சூழ்நிலைகளை ஆராயும்போது குற்றச் செயல் தொடர்பான சூழ்நிலைகள் குற்றத்தின் கடுமையைக் குறைக்கும் வகையிலேயே அமைந்துள்ளதாகக் கருத்து தெரிவித்திருக்கிறது. இந்தக் குற்றத்தை 'ஆணவக் கொலையாக' மட்டுமின்றி ஒரு 'பயங்கரவாதக் குற்றமாகவும்' காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கவேண்டும். அப்படி செய்திருந்தால் தண்டனை அதற்கேற்ப கடுமையாக இருந்திருக்கும்.
நாட்டில் நடக்கும் ஏனைய ஆணவக்கொலைகள் போன்று இதை நாம் கருத முடியாது. பொதுவாக ஆணவக் கொலைகளில் சம்பந்தப்பட்ட ஆண் அல்லது பெண்ணின் பெற்றோர் அல்லது உறவினர்கள் தான் ஈடுபடுவார்கள். உணர்ச்சி வேகத்தில்ல் நடக்கும் குற்றமாக அதை நாம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த வழக்கில் நீதிமன்றமே சுட்டிக்காட்டி இருப்பதுபோல, “எதிரிகளுக்கும் இறந்துபோன கோகுல்ராஜ் மற்றும் சுவாதிக்கும் இடையே சம்பவ காலத்திற்கு முன்பு அறிமுகமே கிடையாது. கோகுல்ராஜை கொலை செய்யக்கூடிய அளவுக்கு அவர்களுக்கு இடையே ஆழமான விரோதமும் இல்லை. ஒரு சாதி அமைப்பின் தவறான கொள்கை மற்றும் சித்தாந்தத்தின் அடிப்படையில்" இந்தக் கொலை செய்யப்பட்டு இருக்கிறது. கொலை செய்யப்பட்ட முறை என்பது பயங்கரவாதிகள் பின்பற்றும் முறையைப் போன்றதாக உள்ளது என்பதை அரசு கவனத்த்கில் கொள்ளவேண்டும்.
பொதுமக்களுக்கு எதிராக ஒரு அரசியல் நோக்கத்துக்காகவோ அல்லது மதம் சார்ந்த நோக்கத்துக்காகவோ அல்லது ஒரு கருத்தியலின் அடிப்படையிலோ திட்டமிட்ட முறையில் வன்முறையைப் பயன்படுத்தி கொலை செய்வது அல்லது அச்சத்தை ஏற்படுத்துவது அல்லது பிளவினை உண்டாக்குவது அல்லது பொது அமைதிக்குக் கேடு செய்வது - அதுதான் பயங்கரவாத நடவடிக்கை" எனப் பயங்கரவாதக் குற்றத்துக்கு அரசு அளித்திருக்கும் விளக்கம் இந்த குற்றச் செயலுக்கு முழுமையாகப் பொருந்துகிறது. எனவே இதைப் பயங்கரவாதக் குற்றமாகவே கருதி காவல்துறை வழக்கு பதிவுசெய்திருக்க வேண்டும். அவ்வாறு வழக்கு பதிவு செய்திருந்தால் இந்தத் தண்டனை அதற்கேற்பக் கடுமையானதாக, பயங்கரவாதிகளுக்கு அளிக்கப்படும் தண்டனையாக அமைந்திருக்கும்.
இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ள ஐந்து எதிரிகள் மீதான குற்றங்களை அரசுத் தரப்பு சரியாக நிரூபிக்கவில்லை என்பதாலேயே விடுவிக்கப்படுகிறார்கள் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே, அவர்களது விடுதலையை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். அவர்களது குற்றங்களையும் நிரூபித்து தண்டனை வாங்கித்தர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
‘இந்தக் கொலைக் குற்றத்துக்கு முன் விரோதமோ, பகைமையோ காரணம் அல்ல. இந்த எதிரிகள் யாவரும் ஒரு சாதி அமைப்பில் உறுப்பினர்களாக இருந்ததனால்தான் அவர்கள் இந்த கொலையைச் செய்து இருக்கிறார்கள்’ என்று நீதிமன்றம் தெளிவாகக் கூறி உள்ளது. அந்த சாதி சங்கத்தின் நிறுவனர் ஒரு பயங்கரவாதப் படுகொலையைச் செய்து சாகும்வரை ஆயுள் தண்டனை அனுபவிக்கவுள்ளார். இந்நிலையில் அந்த சாதி சங்கத்தில் மேலும் பலர் சேர்ந்து இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்கும் பொருட்டு முதல் குற்றவாளி நிறுவிய சாதி சங்கத்தைப் பயங்கரவாத அமைப்பாகக் கருதித் தடை செய்ய வேண்டும் என்று அரசை வலியுறுத்துகிறோம்.
இந்த வழக்கில் சிறப்பாக வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ப.பா மோகனை நீதிமன்றம் பாராட்டி இருக்கிறது, என்ற போதிலும் அரசு வழக்கறிஞருக்குறிய ஊதியமோ, இதர வசதிகளோ அவருக்கு வழங்கப்படாதது வேதனை அளிக்கிறது. மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகனுக்கும், இத்தகைய வழக்குகளில் ஆஜராகும் சிறப்பு வழக்கறிஞர்களுக்கும் ஊதியம் மற்றும் பிற வசதிகளை செய்து தருவதோடு அவர்களுக்கு சமூக விரோதிகளால் ஊறு நேரா வண்ணம் பாதுகாப்பு வழங்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)