Skip to main content

பொங்கல் பண்டிகைக்காக ரூ.5 கோடிக்கு விற்பனையான ஆடுகள்..!!!!

Published on 12/01/2020 | Edited on 12/01/2020

வரவிருக்கும் பொங்கல் பண்டிகைக்காக எட்டையபுரம் ஆட்டு சந்தையில் குட்டி ஆடு முதல் கறிக்கான ஆடுகள் வரை சுமார் ரூ.ஐந்து கோடிக்கும் அதிகமாக ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

 

 Goats sales for Rs 5 crore for Pongal Festival .. !!!!

 

மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பிரசித்திப் பெற்றது தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் ஆட்டு சந்தை. 

பிரதி சனிக்கிழமைதோறும் நடைபெறும் இந்த ஆட்டுச்சந்தையில் அதிகாலை ஐந்து மணிக்கே விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் ஆடு வளர்ப்போர் கூடி சந்தை விற்பனையில் களைக்கட்டும். பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் இச்சந்தையில் ஆட்டுக்குட்டி முதல் கறிக்கான ஆடுகள் விற்பனையாகும். வழக்கமாக வாரந்தோறும் ரூ.2 கோடி அளவிற்கு விற்பனையாகும் ஆடுகள் பண்டிகை காலங்களில் இரு மடங்காக விற்பனையாவது வழக்கம்.

 

 Goats sales for Rs 5 crore for Pongal Festival .. !!!!

 

இம்முறை வரவிருக்கும் பொங்கல் பண்டிகைக்காக சுமார் ரூ.5 கோடிக்கும் அதிகமான அளவில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், ஆடுகளை வளர்த்த விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் பொங்கல் பண்டிகையை எதிர் நோக்கியுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இரவில் சீறிப்பாய்ந்த சொகுசு கார்; போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
police confiscated liquor  who were smuggled in luxury car in Thoothukudi

இந்தியாவில் லோக்சபா தேர்தல் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் அனைத்து கட்சிகளுமே ஒரு வழியாக அதனதன் கூட்டணிகளை உறுதி செய்து, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன.

இது ஒரு புறமிருக்க, தேர்தல் தொடங்கிய காரணத்தால், தேர்தல் தொடர்பான நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். இந்த நடத்தை விதிகள் தேர்தல் ரிசல்ட் வெளியாகும் வரை அமலில் இருக்கும். முறைகேடுகள் நடைபெறுவதை தடுத்து அமைதியான முறையில் தேர்தல் நடத்துவதற்காகவே இந்த நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆலங்கிணறு விலக்கு பகுதியில் வாகன சோதனை நடைபெற்றுள்ளது. சாத்தான்குளம் உதவி காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் இந்த வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரவு சுமார் 8.30 மணியளவில் வெள்ளை நிற சொகுசு கார் ஒன்று அதிவேகமாக வந்துள்ளது. அந்தக் காரை கவனித்த போலீசார், உடனே காரை நிறுத்தும்படி சைகை காண்பித்துள்ளனர். ஆனாலும் தொடர்ந்து அந்தக் கார் வேகமாக வந்துள்ளது. இதனால் கடுப்பான போலீசார், உடனே அந்தக் காரை வழிமறித்து நிறுத்தியுள்ளனர். அதன் பின்னர் அந்தக் கார் நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது, அந்தக் காரில் தேர்தல் செலவிற்காக பணம் எடுத்துச் செல்லப்படுகிறதா?... என்ற கோணத்தில் காரை சோதனை செய்துள்ளனர்.

அப்போது அந்த சொகுசு காருக்குள் விலை உயர்ந்த 12 பீர் பாட்டில்கள் இருந்துள்ளது. ஆனால், அந்த வகை மதுபாட்டில் அரசு மதுபான கடைகளில் கிடைக்காது என சொல்லப்படுகிறது. இதனால், இது குறித்து ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை செய்துள்ளனர். ஆனால், ஓட்டுநர் எந்த பதிலும் கூறவில்லை என சொல்லப்படுகிறது. அதன் பின்னர், அதே காருக்குள் பெரிய பை ஒன்று இருந்துள்ளது. அந்தப் பையில் என்ன இருக்கிறது என சோதனையிட்ட போலீசாருக்கு மேலும் பெரும் அதிர்ச்சியாகியுள்ளது.

காரணம் அந்தப் பையில் மேலும் சில மதுபாட்டில்கள் இருந்துள்ளது. இவ்வாறு ஒரே நேரத்தில் அதிக விலைக்கு விற்கப்படும் மதுபான பாட்டில்களை வைத்திருந்தது குறித்து ஓட்டுநரிடம் விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் கார் ஓட்டுனர், நாகர்கோவிலைச் சேர்ந்த வினோத்குமாரின் மகன் குமார் என்பது தெரியவந்துள்ளது. ஆனால், அந்த விலை உயர்வான மதுபாட்டில்கள் எந்த இடத்தில் வாங்கப்பட்டது என வாய்த்திறக்கவில்லை.

அதே சமயத்தில் இந்த மது பாட்டில்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும், அரசியல் கட்சி நிர்வாகிகளுக்காக வாங்கி வரப்பட்டதா?... என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, அந்த ஓட்டுநரை உடனடியாக போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்தக் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு காரையும் பறிமுதல் செய்துள்ளனர். சாத்தான்குளம் பகுதியில், மது பாட்டிலோடு வந்த சொகுசு கார் ஒன்று, போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கண்ணீர் வடித்த மூதாட்டி; உதவி செய்த முதல்வர் - அடுத்தடுத்து நடந்த சுவாரஸ்யம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Interesting events followed when the CM stalin campaign in Tuticorin

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி துவங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் பாஜக, திமுக, அதிமுக தலைமையில் பல்வேறு கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. வேட்புமனு தாக்கல் மார்ச் 20 ஆம் தேதி தொடங்கிய நிலையில் மனுத்தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

திமுகவை பொருத்தவரை, 21 தொகுதிகளில் நேரடியாக களம் காண்கிறது. இதுதவிர, நாமக்கலில் உதயசூரியன் சின்னத்தில் கொ.ம.தே.க போட்டியிடுகிறது. இந்தக் கட்சியைத் தவிர்த்து மற்ற கட்சிகள், அவரவர் கட்சியின் சின்னத்திலேயே போட்டியிடுகின்றனர். இது ஒரு புறமிருக்க, அனைத்து கட்சிகளுமே தீவிர பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளது. அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பிரச்சார பயணத்தை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் துவங்கியுள்ளார். இந்நிலையில், தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி கருணாநிதியை ஆதரித்து தூத்துக்குடி காமராஜர் மார்க்கெட் பகுதியில் வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

முதல்வர் பிரச்சாரத்திற்கு வந்துள்ளதால், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலரும் முதல்வருடன் சென்றுள்ளனர். தூத்துக்குடி நாடாளுமன்ற மன்ற தொகுதியில் திமுக சார்பில் இரண்டாவது முறையாக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து வாக்கு சேகரிக்க வேண்டும் என்பதற்காக அதிகாலையிலேயே முதல்வர் புறப்பட்டுள்ளார்.

முதலில் தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் வாகனத்தில் சென்றவாறு பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்துள்ளார். அதன் பின்னர் தூத்துக்குடி காமராஜர் தினசரி காய்கறி சந்தைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து காய்கறிகள் வரத்து காய்கறிகள் தரம் ஆகியவை குறித்து கேட்டறிந்துள்ளார். முதல்வர் காய்கறிகள் குறித்து கேள்வி எழுப்பியதும், வியாபாரிகள் ஆர்வத்துடன் பதிலளித்துள்ளனர். அப்போது, காய்கறி வாங்க வந்த அதே பகுதியைச் சேர்ந்த மேரி என்ற மூதாட்டி, தான் காய்கறிகள் வாங்க கொண்டு வந்த 2 ஆயிரம் ரூபாய் பணத்தை தவறவிட்டுவிட்டதாக முதல்வரிடம் கண்ணீர் மல்க கூறியிருக்கிறார். உடனடியாக அந்த பெண்ணிற்கு தமிழக முதல்வர் 2 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார். பின்னர் பிரச்சார வாகனம் மூலம் தூத்துக்குடி பள்ளிவாசல் வழியாக சென்றிருக்கிறார். அப்போது, சாலையில் சென்றவர்களிடம் வாக்குகளை சேகரித்துள்ளார். இதனையடுத்து, தூத்துக்குடி லயன்ஸ் ஸ்டோன் பகுதியில், வீதி வீதியாக சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்துள்ளார்.

அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில், லயன்ஸ்டோன் பகுதியில் உள்ள சூசை தப்பாஸ் என்கின்ற மீனவர் வீட்டிற்குள் திடீரெனெ சென்றுள்ளார். முதல்வர் வீட்டிற்குள் வந்ததால் சூசை குடும்பத்தார் மகிழ்ச்சியில் திக்குமுக்காடியுள்ளனர். பின்னர், அவர்களிடம் பேசி  வாக்கு சேகரித்துள்ளார். அதன் பின்னர், அந்த மீனவர் வீட்டில் அமர்ந்து தேநீர் அருந்தியுள்ளார். அதன் பின்னர் தூத்துக்குடி மாநகர பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் வழியாக வாகனத்தில் சென்றபடி கனிமொழியை ஆதரித்து பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்துள்ளார். இந்த வாக்கு சேகரிப்பின் போது பொதுமக்கள் செல்பி எடுத்தும் கைகளை கொடுத்தும் மகிழ்ந்துள்ளனர். தூத்துக்குடி பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்ததால் பொதுமக்கள் உற்சாகமடைந்துள்ளனர்.