
இறைச்சிக்காகக் கொண்டு செல்லப்படும் ஆடு, மாடுகள், கோழிகள் துன்புறுத்தப்படாமல் எடுத்துச் செல்லப்படுவதை உறுதிச் செய்ய, விதிமுறைகளை வகுக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இறைச்சிக்காக மாடுகள் மற்றும் எருமைகள் கொண்டு செல்லப்படும்போது, பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதால், வழியிலேயே அவை இறந்து விடுவதால், அவற்றை எடுத்துச் செல்லும்போது, துன்புறுத்தல் இல்லாமல் கொண்டு செல்வதை உறுதி செய்யும் வகையில், மிருகவதை தடைச் சட்ட விதிகளைப் பின்பற்ற தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி, விலங்குகள் நல ஆர்வலர் தமிழ்ச்செல்வன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, "மாடுகள் மட்டும் அல்லாமல், இறைச்சிக்காகக் கொண்டு செல்லப்படும் ஆடு, கோழிகளும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதால், அதைத் தடுக்கும் வகையில் உரிய விதிகளை வகுக்க வேண்டும்" என, தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது. மேலும், மனுவுக்கு எட்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கைத் தள்ளிவைத்தனர்.