வழி கேட்டதால் சிக்கிய ஆடு திருடர்கள்; காட்டிக் கொடுத்தது சி.சி.டி.வி. கேமரா!

pdu-goat-recover

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பரமநகர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திரன். இவரது வீட்டில் வளர்த்த ஆடுகளில் ஒன்று வடகாடு முத்துமாரியம்மன் கோயிலுக்கு நேர்ந்துவிடப்பட்டது. அந்த ஆட்டுக்கிடாயை நேற்று (09.07.2025) காலை 09.28 மணிக்கு அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் தூக்கி பைக்கில் வைத்துக் கொண்டு சென்றுவிட்டனர். இதனையடுத்து அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் ஆடு திருடிச் செல்வதும் பதிவாகி இருந்தது. இந்த பதிவுகளுடன் ராஜேந்திரன் வடகாடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார் மழையூர் காவல் சரகம் பொன்னன்விடுதி கிராமத்தைச் சேர்ந்த ராமன் மகன் பெருமாள் மற்றும் மாணிக்கம் மகன் ராமராஜன் ஆகிய இருவரையும் அடையாளம் கண்டு அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் வடகாட்டில் திருடிச் சென்ற ஆட்டுக் கிடாயையும் மீட்டு வந்து வழக்குப்பதிவு செய்து மீட்கப்பட்ட ஆட்டை ராஜேந்திரனிடம் ஒப்படைத்தனர்.

மேலும், வடகாடு பகுதிக்குள் புதிதாக வந்ததால் ஆட்டைத் திருடிக் கொண்டு ஒரு சிறிய சாலையில் சென்ற போது ஒரு இடத்தில் சாலை முடிந்து போனது. அந்த இடத்தில் உள்ள வீட்டில் வடகாடு எப்படி போகனும் என்று பைக்கை நிறுத்தி வழி கேட்ட போது அந்த இடத்தில் சிசிடிவி இருந்தது தெரியாமல் சிக்கிக் கொண்டோம் என்று கூறியுள்ளனர். வழிதடுமாறிச் சென்று வழிகேட்டதால் சிசிடிவியில் சிக்கிய ஆடுதிருடர்களை எளிமையாக அடையாளம் கண்டு தூக்கியுள்ளனர் போலீசார்.

cctv goat police pudukkottai
இதையும் படியுங்கள்
Subscribe