Advertisment

ஆடு திருட போனவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு!! போலீசார் விசாரணை

police

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகிலுள்ளது பூசப்பாடி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் ரவி. வயது 38. இவரும் அதே ஊரைச் சேர்ந்த தனது நண்பர்களான அழகர், செந்தில் ஆகியோருடன் ஒரே பைக்கில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் மூங்கில் பாடி கிராமத்திலுள்ள முருகேசன் என்பவரது காட்டுக்கொட்டாய் நிலத்திற்கு சென்றுள்ளனர்.

Advertisment

சாலையோரம் பைக்கை நிறுத்திவிட்டு செந்திலை பைக்கில் தயாராக காத்திருக்கும்படி கூறிவிட்டு ரவியும்,அழகரும், முருகேசனும்காட்டுக்கொட்டாய் பகுதியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை திருட்டுத்தனமாக தூக்குவதற்கு சென்றனர். ஆட்டை தூக்கும்போது ஆடுகள் சத்தமிட்டு கத்தி உள்ளன. அந்த சத்தத்தை கேட்டு ஆட்டுப்பட்டி அருகில் படுத்திருந்த ஆடுகள் உரிமையாளர் முருகேசன் எழுந்து டார்ச் லைட் அடித்து பார்த்துள்ளார். இதனால் பயந்துபோன ரவியும் அழகரும் தூக்கிய ஆட்டை விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். அப்படி ஓடிய இருவரும் அங்கு உள்ள தரை கிணற்றின் படிக்கட்டுகளில் இறங்கி ஒளிந்து கொள்வதற்காக இறங்கி உள்ளனர். இதில் ரவி படியில் இறங்கும்போது கிணற்றில் தவறி விழுந்து உள்ளார். இதை கவனிக்காத அழகர் கிணற்றின் உள்வட்ட படிக்கட்டில் பதுங்கி கொண்டார். அதே நேரத்தில் ஆடுகளின் உரிமையாளர் முருகேசன் சத்தம் போட்டு ஊர் மக்களை திரட்டிக் கொண்டு வந்து கிணற்றில் பதுங்கி இருந்த அழகரை மடக்கிப் பிடித்தனர். அவருடன் வந்த இன்னொருவர் எங்கே என்று விசாரித்தபோது அவர் கிணற்றில் விழுந்து விட்டார் என்பது தெரியவந்துள்ளது.

Advertisment

இதையடுத்து கிணற்றில் இறங்கி தேடியபோது, ரவி தலையில் அடிபட்டு பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தது தெரியவந்தது. இதற்கிடையே பைக்கில் வந்த மூவரில் ஒருவரான செந்தில் பைக்கில் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து ஊர் பொதுமக்கள் சின்னசேலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ராஜா, சப் இன்ஸ்பெக்டர் பால முரளி மற்றும் சகபோலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் கிடந்த ரவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர். ஆடு திருட சென்றவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Police investigation died thief goat kallakurichi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe