பட்டப்பகலில் ஆடு திருட்டு; சி.சி.டி.வி.யில் சிக்கிய திருடர்கள்!

pdu-goat
புதுக்கோட்டை மாவட்டத்தில் திருட்டுச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருடர்கள் பிடிபடாததால் திருட்டுகள் மேலும் மேலும் அதிகரித்துள்ளது. வழிப்பறி, பூட்டு உடைத்து திருட்டு, கத்தியைக் காட்டி திருட்டு, ஆடுகள் திருட்டு, பைக்குகள் திருட்டு என்று குற்றச் செயல்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் வடகாடு பரமநகர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் வீட்டில் வளர்த்து வந்த வெள்ளாட்டுக் கிடாய் ஒன்றை இன்று (09.07.2025 - புதன்கிழமை) காலை 9.28 மணிக்கு அந்த வழியாக ஒரு பைக்கில் வந்த இருவர் ஆட்டுக்கிடாயைத் தூக்கிக் கொண்டு சென்றுள்ளனர். இந்த திருட்டு காட்சிகள் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது. 
ஆடு திருடு போய் சிறிது நேரத்திலேயே ஆட்டை காணவில்லை என்றதால் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து ஆட்டை இருவர் திருடிச் செல்லும் பதிவுகளோடு வடகாடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து ஆடு திருடர்கள் யார் என்பதை போலீசார் உறுதி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் ஆடு திருடர்கள் சிக்கலாம் என்று கூறும் வடகாடு விவசாயிகள் கடந்த ஒரு வருடத்தில் வடகாட்டில் மட்டும் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் திருடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவும் இல்லை, ஆடுகள் மீட்கப்படவும் இல்லை. 
இப்போது பட்டப்பகலில் ஆடு திருடியவர்களின் முகங்கள், பைக் கண்காணிப்பு கேமராவில் சிக்கியுள்ளதால் இந்த காட்சிகளின் அடிப்படையில் போலிசாரிடம் சிக்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இவர்களைப் பிடித்தால் ஏற்கனவே எங்கள் ஊரில் திருடிய ஆடுகள் பற்றியும் தெரியவரும் என்கின்றனர். இதே போலக் கடந்த வாரம் கீரமங்கலத்தில் இரு இளைஞர்கள் ஒரு பைக் திருடிச் செல்லும் வீடியோ காட்சிகள் பதிவாகி இருந்ததை கீரமங்கலம் போலீசார் எடுத்துச் சென்றனர். ஆனால் இதுவரை திருடர்களைப் பிடிக்கவில்லை என்கின்றனர் வேதனையுடன். அதே சமயம் போலீசார் பற்றாக்குறையால் இது போன்ற சம்பவங்களில் விசாரணை செய்யும் போலீசாருக்கு திருவிழா, வி.ஐ.பி.கள் வருகைக்குப் பாதுகாப்புகளுக்கு அனுப்புவதால் திருட்டுச் சம்பவங்களில் கண்காணிப்பு கேமரா பதிவுகள் இருந்தாலும் கண்டுபிடிக்க முடியாமல் போகிறது என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளது.
CCTV footage goat pudukkottai
இதையும் படியுங்கள்
Subscribe