Skip to main content

“மது விற்பனையை குறைக்க வேண்டும் என்பது தான் இலக்கு” - அமைச்சர் முத்துசாமி 

Published on 09/11/2023 | Edited on 09/11/2023

 

The goal is to reduce sales  Minister Muthuchami

 

ஈரோட்டில் மணல்மேடு பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மாநில அளவிலான பள்ளி கல்லூரி மாணவர்கள் இடையிலான பேச்சுபோட்டி, கட்டுரை போட்டி நடைபெற்றது. இதனை மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

 

இதன் பின்னர் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “முன்னாள் முதல்வர் கலைஞரின் பேனா வடிவிலான வாகனம் வரும் 23 ஆம் ஈரோடு மாவட்டத்திற்கு வர உள்ளது. இதனை பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் பெரியார் சிலை அகற்றுவோம் என்பது சொல்வது மிக தவறான கருத்து. பெரியார் கொள்கை ரீதியாக மட்டுமில்லாமல் மக்களுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு சமநிலையை உருவாக்கியவர். பாஜக முதலில் தமிழகத்தில் ஆட்சிக்கு வரட்டும், வந்த பின்பு பேசிக்கலாம். அப்படியே வந்தாலும். பெரியார் சிலை அகற்றத்தை யாரும் பார்த்து கொண்டு சும்மா இருக்கமாட்டார்கள். ஆட்சிக்கு வருவதற்கு கற்பனை கூட பாஜகவால் செய்து பார்க்க முடியாது. வேண்டும் என்றால் 50 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக யோசிக்கலாம்.

 

அமைச்சர் எ.வ.வேலு திட்டவட்டமாக வருமான வரி சோதனை முடிவில் எதுவும் தன்னிடம் இருந்து கைப்பற்றவில்லை என்று சொல்லி உள்ளார். கட்சியில் ஏராளமான நண்பர்கள், பழக்கமானவர்கள் என்ற சூழலில் திமுக கட்சிக்கு பலத்தை ஏற்படுத்தும் வகையில் தீவிரமாக பணியாற்றி வருபவர்கள் மீது வேண்டுமென மத்திய அரசு சோதனை என்ற பெயரில் நடவடிக்கை எடுத்து வருவது கண்டிக்கத்தக்கது. பெருந்துறை சிப்காட் வளாகத்தில் கழிவு நீர் வெளியேற்றும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிப்காட் தொழிற்சாலைகள் பாதிப்பு 20 ஆண்டுகால பிரச்சனை என்பதால், முதல்கட்டமாக கழிவு நீர் எந்த ஆலைகளும் திறந்து விடக்கூடாது. நிலத்தடி நீர் மாசுபடுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட குளங்கள் தூர்வாருவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, படிப்படியாக சுத்தம் செய்யும் வேலைகள் நடந்து வருகிறது. மாசடைந்த நிலத்தடி நீர் 3 அடியில் இருந்து 15 அடி வரை நிலத்தடி நீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். அதுவும் கோடைகாலத்தில் தான் மேற்கொள்ள வேண்டிய ஒன்று. இதை அரசியல் ரீதியாக கொண்டு போக வேண்டாம்.

 

தீபாவளிக்கு மது விற்பனை என்பது எங்கள் இலக்கு இல்லை. எங்கள் உடைய இலக்கு மது விற்பனை குறைய வேண்டும் என்பதே. மதுக்கடை ஊழியர்கள் பணி பாதுகாப்பு உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் காவல்துறை மூலம் எடுக்கப்பட்டு உள்ளது. மதுக்கடை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மதுக்கடையில் விற்பனை நிகழும் போது போதுமான தடுப்புகள் வழக்கமாக உள்ளது. தீபாவளி பண்டிகையில் தேவைப்படும் இடங்களில் தடுப்புகள் அமைக்கப்படும்” என தெரிவித்தார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்