GO For Chidambaram Natarajar Temple

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீது பொதுமக்கள், பக்தர்கள் ஏறி வழிபட சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றினர். இந்த நிலையில் நடராஜர் கோவில் கனக சபையில் ஏறி வழிபட பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஜெயசீலா என்ற பெண் சென்றார். இதற்கு தீட்சிதர்கள் அவரை வழிபட விடாமல் தடுத்து முற்றுகையிட்டனர்.

Advertisment

இந்த காணொளி அனைத்து பகுதி மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தீட்சிதர்களின் செயல்பாட்டை கண்டித்து மக்கள் அதிகாரம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், திராவிடர் கழகம், தமிழ் தேசிய பேரியக்கம், சிவனடியார்கள், பொதுமக்கள், பக்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதிகாலம் முதல் கனகசபையில் ஏறி வழிபட்டது போல் அனுமதிக்க வேண்டும் என கோவில் வாயிலில் போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தனர்.

Advertisment

இந்த நிலையில் இன்று(மே-19) தமிழக அரசு கனகசபை மீது ஏறி வழிபடலாம் என அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள், பக்தர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வரவேற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

இந்த நிலையில், சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி அரசாணை குறித்து விபரம் அளிக்க சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களுக்கு அலுவலகத்திற்கு வர அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து தீட்சிதர்கள் அவர்களின் கூட்டத்தில் விவாதித்து வருகிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த துணைத் தலைவரும் நடராஜர் கோவில் குறித்து வழக்கு தொடுத்தவருமான ஜெமினி ராதா கூறுகையில், “தமிழக அரசு, அரசாணை வெளியிட்டது பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. தமிழகத்தில் முதல்வர் பொற்கால ஆட்சி நடத்தி வரும் சூழலில் அனைத்து மக்களும் கனகசபையில் ஏறி வழிபடலாம் என அரசாணை வெளியிட்டது அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவித்தார்.