Gnanasekaran was punished doesn't mean complete justice has been achieved

ஞானசேகரனின் குற்றங்களில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் இந்த வழக்கின் விசாரணை அதிகாரிகளால் கருத்தில் கொள்ளப்படவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிடுள்ள அறிக்கையில், “சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும், அவர் குற்றவாளி தான் என்றும் சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. குற்றவாளி ஞானசேகரனுக்கு வரும் ஜூன் 2-ஆம் நாள் தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு ஆறுதல் அளிக்கிறது.

Advertisment

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட குற்றத்தை மூடி மறைப்பதற்கு தான் அரசுத் தரப்பிலும், காவல்துறை தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், மாணவர்கள் மற்றும் மகளிர் அமைப்புகளும் களமிறங்கிய பிறகு தான் இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையே பதிவு செய்யப்பட்டது. அதன் பின் சென்னை உயர்நீதிமன்றமும் இந்த வழக்கில் தலையிட்டதன் காரணமாகத் தான் விரைவாகவும் ஓரளவு சரியாகவும் தீர்ப்பு கிடைத்திருக்கிறது. இல்லாவிட்டால் அனைத்து ஆதாரங்களும் அழிக்கப்பட்டு ஞானசேகரன் அப்பாவியாகவும், புனிதராகவும் காட்டப்பட்டிருப்பார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரன் தண்டிக்கப்பட்டதாலேயே அனைத்தும் முடிந்து விட்டதாக அர்த்தமல்ல. இந்த வழக்கில் ஞானசேகரன் மட்டும் தான் குற்றஞ்சாட்டப்பட்டார். அதனால் தான் அவர் மட்டும் தண்டிக்கப்பட்டிருக்கிறார். அண்ணா பல்கலைக்கழக மாணவி மட்டுமல்லாமல் மேலும் பல மாணவிகள் ஞானசேகரனால் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் . ஞானசேகரனின் குற்றங்களில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் இந்த வழக்கின் விசாரணை அதிகாரிகளால் கருத்தில் கொள்ளப்படவில்லை.

Advertisment

எனவே, ஞானசேகரன் தண்டிக்கப்பட்டதால் மட்டுமே முழுமையான நீதி கிடைத்து விடவில்லை. அண்ணா பல்கலைக்கழக மாணவி உள்ளிட்ட பல பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய ஞானசேகரனுக்கு ஆதரவாகவும், துணையாகவும் இருந்தவர்கள் யார்? என்பதைக் கண்டறிந்து அவர்களுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். ஞானசேகரனுக்கு வரும் 2-ஆம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் போது, வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கும் இழப்பீடு உள்ளிட்ட உதவிகளை அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.