
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அதே சமயம் இந்த வழக்கைச் சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் சினேகபிரியா, ஆவடி துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் துணை ஆணையர் ஆகியோர் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது. இந்த குழுவின் பரிந்துரையின் பேரில் ஞானசேகரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கிடையே இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) வெளியானது சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அதே சமயம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகச் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர், தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாகக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி ஞானசேகரன் சென்னை அல்லிகுளம் பகுதியில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த மாதம் (08.04.2025) நடைபெற்றது. அப்போது நீதிபதி இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். மேலும் ஞானசேகரனுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதற்கிடையே தனக்கு எதிராகக் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை. ஆதாரங்கள் இல்லாமல் தனக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன. எனவே இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று ஞானசேகரன் தரப்பில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் தான் சிறப்பு நீதிமன்றம் விடுமுறை என்பதால் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜ் சிங் அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது ஞானசேகரன் இரு முறை நேரில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது, ‘தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும். காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவை ஏற்றுக் கொள்ளக் கூடாது’ என்றும் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கில் இருந்து ஞானசேகரை விடுவிப்பது தொடர்பாக வரும் 28ஆம் தேதி (28.05.2025 - புதன்கிழமை) உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.