Skip to main content

"தி.மு.க. தேர்தலுக்காக நாடகம் நடத்துகிறது"! - ஜி.கே.வாசன் பேட்டி!

Published on 28/01/2021 | Edited on 28/01/2021

 

gk vasan mp pressmeet at erode

 

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தேர்தலுக்காக அ.தி.மு.க. அரசு மீது குற்றம் சுமத்துகிறார் எனத் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. கூறினார்.

 

ஈரோடு மாவட்டத்திற்கு நேற்று (27/01/2021) வருகை தந்த ஜி.கே.வாசன் எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "ராகுல் காந்தி தமிழகத்தில் பல இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அ.தி.மு.க. அரசுக்கு எதிராக அவர் விமர்சனம் செய்துள்ளார். இது தேர்தலுக்காகவும், அரசியலுக்காகவும் பேசப்பட்டது. ஒரு அகில இந்திய தலைவர் வரும்போது அந்தந்த மாநிலத் தலைமை மற்றும் மாவட்ட தலைமை இதற்கான ஏற்பாடுகளைச் செய்யும். எனவே, அவர் வரும் போது அதிக கூட்டம் சேர்ந்தது என்பது ஆச்சரியத்திற்குரியது அல்ல. மத்திய அரசு வேளாண் சட்டங்களுக்குத் தீர்வுகான பலமுறை விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

 

உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலையும் ஏற்றுக் கொண்டது. ஆனால் விவசாயிகள் சிலரின் தூண்டுதலால் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துகின்றனர். குடியரசு தினத்தன்று நாட்டின் மதிப்பை பாதிக்கும் வகையில் சில சமூக விரோத சக்திகள் டெல்லியில் வன்முறையில் ஈடுபட்டன. இது கண்டிக்கத்தக்கது. ஒரு சில மாநில விவசாயிகள் மட்டுமே இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே இதில் சுமூக தீர்வு ஏற்பட அனைவரும் முயற்சிக்க வேண்டும். தி.மு.க. தலைவர் தேர்தலுக்கு மூன்று மாதம் இருக்கையில் மக்களிடமிருந்து குறைதீர்ப்பு மனுக்களைப் பெற உள்ளதாகக் கூறியுள்ளது, வாக்காளர் மத்தியிலேயே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தேர்தல் நாடகமாக மக்கள் கருதுகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தைத் திறந்து வைத்ததை வரவேற்கிறேன். சசிகலா விடுதலை எந்த மாற்றத்தை ஏற்படுத்தாது" எனத் தெரிவித்துள்ளார்.

 

இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, கட்சி நிர்வாகிகள் விடியல் சேகர், சந்திரசேகர், இளைஞர் அணித் தலைவர் யுவராஜா, ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.