Give at least 10 thousand.. - Revenue inspector arrested for taking bribe

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாக துருவம் அருகே உள்ள ஒகையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. விவசாயியான இவர், கடந்த 2007 ஆம் ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த பெரியசாமி என்பவரிடம் 90 சென்ட் விவசாய நிலத்தை வாங்கி உள்ளார். அந்த நிலத்தை நாகலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் கிரயம் செய்துள்ளனர். அந்த நிலத்தை சுப்பிரமணிக்கு பட்டா செய்யாமல் இருந்துள்ளது.

இதையறிந்த சுப்பிரமணியன் மகன் மணி(33), தனது தந்தை பெயரில் கிரயம் பெற்ற நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்து தராமல் உள்ளது. எனவே பட்டா மாற்றம் செய்து தர வேண்டும் என கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஏற்கனவே மனு அளித்திருந்துள்ளார். அந்த மனு மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி அலுவலகத்தில் பணி செய்யும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பாலு, மனு கொடுத்திருந்த மணியை வரவழைத்து ‘உனது தந்தை பெயரில் கிரயம் பெற்றுள்ள நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்து தர வேண்டுமானால் எங்களுக்கு ரூ. 15,000 லஞ்சமாகக் கொடுத்தால் விரைவில் பட்டா மாற்றம் செய்து தர முடியும்’ என்று கூறியுள்ளார். அதற்கு மணி, ‘அவ்வளவு பணம் என்னிடம் இல்லை’ என்று கூறியுள்ளார். பிறகு பாலு பேரம் பேசி ‘பத்தாயிரம் ரூபாயாவது கொடுத்தால் தான் பட்டா மாற்றம் செய்ய முடியும். இல்லை என்றால் அந்த பணி நடக்காது’ என்று கூறியுள்ளார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து மணி, கள்ளக்குறிச்சி லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகம் சென்று அங்குள்ள போலீசாரிடம் முறையிட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சத்யராஜ் தலைமையிலான போலீசார் மணி அளித்த புகார் மனு மீது வழக்குப் பதிவு செய்து மணியிடம் ரசாயனம் தடவிய பத்தாயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்து முதுநிலை வருவாய் ஆய்வாளர் பாலுவிடம் நேரில் சென்று கொடுக்குமாறு அனுப்பி வைத்தனர். அதன்படி மணி நேற்று முதுநிலை ஆய்வாளர் பாலுவிடம் லஞ்சப் பணம் கொடுக்கும் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சத்யராஜ் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக முதல் நிலை ஆய்வாளர் பாலுவை சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.