
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (23/01/2022) சென்னை, அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கத்தில் நடந்த, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவர் பூச்சி முருகனின் மகள் எம்.அருணா- எம்.அசோக் சக்கரவர்த்தி ஆகியோரது திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.
திருமண விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "பிள்ளைகளுக்கு அழகான தமிழ் பெயர் வைக்க வேண்டும். பூச்சி முருகனை நான் முருகன் என்றே அழைப்பேன்; ஏனெனில் எனக்கு முருகன் மீது அன்பு, பாசம் உண்டு. என்னை பொறுத்தவரை முதல் முதலமைச்சர் என்பதைவிட முதல் மாநிலம் தமிழ்நாடு என்பதாக வர வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இந்த திருமண விழாவின் போது, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், அந்தியூர் பி.செல்வராஜ், ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் மணமக்களின் குடும்பத்தினர் உடனிருந்தனர்.