புதுக்கோட்டை மாவட்டம் சண்முக நகரைச் சேர்ந்தவர் வினிஸ்(28). இவரும் மதுரை பொன்மேனி ராகவேந்திரா நகரில் வசிக்கும் 25 வயது மதிக்கத்தக்க மதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரும் கடந்த 4 வருடங்களாகக் காதலித்துவந்துள்ளனர். இந்நிலையில், வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் திருச்சி மண்ணச்சநல்லூரில் வினிசின் பெரியப்பா சங்கரன் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
பெரியப்பாவின் வீட்டின்மாடியில் காதலர்கள் இருவரும் தங்கி உள்ளனர். இந்நிலையில் மண்ணச்சநல்லுார் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்திரா நகரில் உள்ள வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, காதலன் வினிஸ் உடல் துாக்கில் தொங்கிய நிலையில் பிணமாகவும், காதலி மதி உடல்கள் கிழிக்கப்பட்டு ரத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார்.
இதையடுத்து, போலீசார் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தமதியை உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், வினிசின் உடலைக் கைப்பற்றி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த மண்ணச்சநல்லுார் போலீசார் நடந்த சம்பவம் தற்கொலையா அல்லது கொலையா எனத்தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.