
கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் மருங்கூர் கீழக்கொல்லையை சேர்ந்தவர் செந்தில்நாதன்(கார் டிரைவர்). இவரது மகன் அஸ்வின்(4) நேற்று மதியம் 3மணி முதல் காணவில்லை. இவனை இவனது பெற்றோர்கள், உறவினர்கள், ஊர்க்காரர்கள் பல இடங்களில் தேடினர். எங்கும் கிடைக்காததால் முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் செய்தனர். கடம்புளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தாமரை பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ரஞ்சிதா இந்த சிறுவனை அழைத்துச் சென்றதாக தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ஏராளமான போலீசார் மற்றும் ஊர் மக்கள் கிராமத்தை முழுவதும் சல்லடை போட்டு தேடினர். சிறுவன் எங்கும் கிடைக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நள்ளிரவில் சென்னை கும்பகோணம் சாலை கொள்ளுகரங்குட்டை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைதொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இரவு முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இன்று காலை அதே பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் பலத்த காயத்துடன் அடித்துக் கொலை செய்யப்பட்டு பிணமாக சிறுவன் உடலை போலீஸார் கண்டெடுத்தனர். பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பண்ருட்டி தாசில்தார் சிவகார்த்திகேயன், துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளனர்.