Schoolgirl abortion pill Eat -incident in thiruvannamalai

Advertisment

திருவண்ணாமலை மாவட்டத்தில் கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட பள்ளி சிறுமி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் மலையனூர்செக்கடி என்ற கிராமத்தைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு பயின்றுவந்த மாணவி அதேபகுதியைச் சேர்ந்த முருகன் என்ற நபருடன் பழகிவந்துள்ளார். இந்நிலையில் ஆசை வார்த்தை கூறி முருகன் பலமுறை சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து சிறுமி கருவுற்ற நிலையில், இதனை முருகனிடம் தெரிவித்துள்ளார் அந்த மாணவி. இதனைக்கேட்டு அதிர்ந்த முருகன் இதுகுறித்து அவனது நண்பர்களான பிரபு, காந்தி உள்ளிட்ட இருவர்களிடம் தெரிவித்துள்ளான். அதனைத்தொடர்ந்து நண்பர்கள் கொடுத்த ஆலோசனையின் படி கருக்கலைப்பு மாத்திரையை அந்த சிறுமிக்குக் கொடுத்துள்ளான் முருகன்.

இப்படிப்பட்ட நிலையில் மாத்திரையைச் சாப்பிட்டுவிட்டு பள்ளிக்குச் சென்ற மாணவி வழியிலேயே மயங்கி கீழே விழுந்துள்ளார். சிறுமி மயக்கமடைந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் சிறுமியின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்துவிட்டு மாணவியை அருகில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் மாணவி ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் தானிப்பாடி காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில் போலீசார் இது தொடர்பாக விசாரணை செய்து முருகன் மற்றும் அவனது நண்பன் பிரபுவைக் கைது செய்துள்ளனர்.மேலும் காந்தி என்ற நபரை போலீசார் தேடிவருகின்றனர். கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட பள்ளி சிறுமி உயிரிழந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.