திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள ஆரம்பாக்கம் பகுதியில் கடந்த 12ஆம் தேதி (12.07.2025) 10 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து பாட்டி வீட்டுக்குச் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின் தொடர்ந்து வந்த ஒருவர் சிறுமியைத் தூக்கிச்சென்று அருகில் உள்ள தோப்பில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தார். அதன் பின்னர் அங்கிருந்து தப்பிய சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை தன்னுடைய பாட்டியிடம் தெரிவித்த நிலையில் சிறுமியை அவருடைய பாட்டி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதற்கிடையே சிறுமி நடந்து சென்ற பகுதிக்கு அருகே உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆராய்ந்த போது இளைஞர்  ஒருவர் சிறுமியைப் பின்தொடர்ந்து செல்வதும், திடீரென யாரும் இல்லாத நேரத்தில் அவர் அங்கிருந்து சிறுமியைத் தூக்கிச் சென்றது தொடர்பான காட்சி வெளியாகியுள்ளது. இந்த காட்சியின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும். அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளியைக் கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணையானது தீவிரப்படுத்தப்பட்டது. அதே சமயம் சிகிச்சையில் உள்ள சிறுமி நலமாக உள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. கடந்த 10 நாட்களாக ஆந்திராவின் தடா, சூலூர்பேட்டை, பூடி, காரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழக காவல் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மற்றொரு புறம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவரைப் பிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

இந்நிலையில் குற்றவாளி பற்றி தகவல் தெரிவித்தால் 5 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவம் நடைபெற்ற இடம் ஆந்திர மாநில எல்லை என்பதால், சம்பந்தப்பட்ட குற்றவாளி ஆந்திர மாநிலத்திற்கு ரயில் வழியாகத் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம் குற்றவாளியின் உடல் மற்றும் தோற்றத்துடன் ஒத்துப்போகக்கூடிய 10 பேரை இதுவரை விசாரித்து உள்ளனர். மேலும் இந்த  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள ஆரப்பாக்கம் காவல் நிலையத்தில் இருந்து சற்று தொலைவில் ஆந்திர மாநில எல்லை ஆரம்பிப்பதன் காரணமாக ஆந்திர மாநில காவல் துறையினரிடமும், தமிழக காவல்துறையினர் உதவி கேட்டிருந்தனர்.

இருப்பினும் குற்றவாளிகள் கைது செய்யப்படுவதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. மற்றொருபுறம் இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் உத்தரப்பிரதேச இளைஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டர். சி.சி.டி.வி. காட்சியில் பதிவான நபரின் உருவத்தைப்போல் அவர் இருப்பதால் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த இளைஞர் மதுபோதையில் கீழே விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.