Skip to main content

கணவரிடமிருந்து குழந்தைகளை மீட்டு தரக்கோரி கண்ணீருடன் பெண் புகார்

Published on 21/05/2018 | Edited on 21/05/2018

 

covai 600.jpg


சொத்துக்களை அபகரித்துக்கொண்ட கணவரிடமிருந்து குழந்தைகளை மீட்டு தரக்கோரி கண்ணீருடன் பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.


மும்பையை சேர்ந்த சோனல் என்பவருக்கும் கோவையை சேர்ந்த வடமாநில தொழிலதிபர் சேத்தன் ரங்கா என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 13 வயதில் பியூஷ் என்ற மகனும், 7 வயதில் ரச்னா என்ற மகளும் உள்ளனர். 
 

கடந்த சில ஆண்டுகளாக இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு நிலவி வந்த நிலையில் வரதட்சணை கேட்டு சேத்தன், சோனலை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் விவாகரத்து கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். 
 

இந்நிலையில் இன்று குழந்தைகளை பார்க்க வந்த சோனலை அனுமதிக்காமல் சேத்தன் தடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட சோனலை சாய்பாபா காலனி போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். 
 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சோனல், தன்னிடம் இருந்து வரதட்சணையாக 2.5 கிலோ தங்கம், 25 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை பெற்றுக்கொண்டு தனது கணவரின் குடும்பத்தினர் தன்னை கூடுதலாக பணம் கேட்டு கொடுமைப்படுத்துவதாக கூறினார். மேலும் தனது குழந்தைகளை கூட பார்க்கவிடாமல் கணவரின் குடும்பத்தினர் துரத்தி விடுவதாக குற்றம்சாட்டிய அவர் தனது குழந்தைகளையும் உடமைகளையும் தனக்கு பெற்றுதர காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் கண்ணீருடன் கோரிக்கை வைத்தார். பெண் ஒருவர் கண்ணீருடன் காவல்நிலையத்தில் புகார் அளித்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

காதல் திருமணம்; காவல் நிலையத்தின் முன்பு நடந்த மோதலால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
 Excitement due to the previous conflict at the police station for love marriage

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த, திம்மம்பேட்டை அடுத்த புல்லூர் பகுதியை சேர்ந்தவர் இளைஞர் முருகன். இவர் அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சில மாதங்களிலேயே, இவரது மனைவி தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், ஆட்டோ ஓட்டுநர் முருகனுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த 21 வயதான அபிநயா ஶ்ரீ என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இவர்களது காதல் விவகாரத்தை அறிந்த, பெண் வீட்டார், அந்த பெண்ணிடம் காதலை கைவிடுமாறு எச்சரித்துள்ளனர். ஆனால், அவர்கள் தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர். 

இந்த நிலையில், காதலர்கள் இருவரும் கடந்த 24 ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியேறி பழனி சென்று அங்குள்ள முருகர் கோயிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனையடுத்து, அவர்கள் இருவரும் பொள்ளாச்சி பகுதியில் அறை எடுத்து தங்கி இருந்துள்ளனர். இதற்கிடையே, கடந்த 26 ஆம் தேதி பெண்ணின் பெற்றோர்கள் திம்மாம்பேட்டை காவல் நிலையத்தில் காணாமல் போன மகளை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தனர். 

அவர்கள் அளித்த புகாரின் பேரில், இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், காதலர்களின் செல்போனை எண்ணை ஆய்வு செய்துள்ளனர். இதனையடுத்து, காதலர்களின் செல்போன் சிக்னலை வைத்து பொள்ளாச்சியில் தங்கியிருந்தவர்களை போலீசார் கண்டுபிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது, இரு தரப்பினரை சேர்ந்தவர்கள் காவல் நிலையம் முன்பு குவிந்தனர். இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் காவல் நிலையம் முன்பு பரபரப்பான சூழல் நிலவியது. இதைத்தொடர்ந்து, காதலர்கள் இருவரும் மேஜர் என்பதால் இருவரும் ஒன்றாக செல்வதாக விருப்பம் தெரிவித்ததால், போலீசார் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Next Story

அதே குற்றச்சாட்டு - சுந்தரா டிராவல்ஸ் பட நடிகை மீது மீண்டும் புகார்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
complaint against Sundhara Travels actress radha

முரளி, வடிவேலு உள்ளிட்ட பல பேர் நடிப்பில் 2002ல் வெளியான சுந்தரா ட்ராவல்ஸ் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ராதா. தொடர்ந்து அடாவடி, காத்தவராயன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பின்பு நடிப்பிலிருந்து விலகியிருந்தார். 

இந்த சூழலில் கடந்த மாதம் ராதா மீதும் அவரது மகன் மீதும் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சென்னை, சாலிகிராமத்தை சேர்ந்த டேவிட் ராஜ், தன் மகனை இருவரும் சேர்ந்து கடுமையாக தாக்கியதாக குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே ராதா தரப்பில் இந்த விவகாரம் தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஏற்கெனவே புகார் கொடுக்கப்பட்டு, அதன் விசாரணை நிலுவையில் உள்ளது. 

இந்த நிலையில் சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த முரளி என்பவர் தரப்பில், ராதா மீது வடபழனி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் முரளியை ராதா தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் முரளிக்கு தலையில் காயம் ஏற்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முரளியின் புகார் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து ராதா மீது ஒரே மாதிரியான புகார்கள் எழுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.