Skip to main content

கடலூரில் நடைப்பெற்ற பெண் குழந்தைகள் கருத்தரங்கம்.

Published on 22/01/2021 | Edited on 22/01/2021

 

Girl child seminar held in Cuddalore.

 

கடலூர் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் 'பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற திட்டம் குறித்து பல்வேறு துறை அலுவலர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

 

மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, "நம் நாட்டில் பெண் குழந்தைகள் பாலின விகிதம் குறைவாக உள்ள 100 மாவட்டங்களில் ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த நமது கடலூர் மாவட்டமும் ஒன்று.

 

கடந்த 24.1.2015 அன்று தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் பண்ருட்டி வட்டாரத்தில் உள்ள மருங்கூர் கிராமத்தில் ‘பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது. 

 

இந்த திட்டத்தின் நோக்கம் பெண் குழந்தைகளைப் பாதுகாப்பது. அதன்படி கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தைக் கண்டறிந்து கூறாமல் இருத்தல், இந்தச் சட்டத்தை மீறுவோர் மீது கடுமையான தண்டனை வழங்குதல், பாலின பாகுபாடு களைதல், பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் சமுதாய பங்கேற்பதை உறுதி செய்தல் ஆகும்.

 

கடலூர் மாவட்டத்தில் சிசுவின் பாலினத்தைக் கண்டறிந்து தெரிவித்த 14 ஸ்கேன் மையங்கள் மூடப்பட்டுள்ளன. 683 ஊராட்சிகளில் உள்ள 2342 கிராமங்களில் பெண் ஆண் குழந்தைகளின் பிறப்பு எண்ணிக்கை மற்றும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கையை அறிய உதவும் தகவல் பலகை அமைக்கப்பட்டுள்ளது.

Girl child seminar held in Cuddalore.

 

இந்தத் திட்டம் குறித்து பரப்புரை செய்வதற்காக 322 வளரிளம் பெண்கள் திட்ட தூதுவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 513 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. தொட்டில் குழந்தை திட்டத்தில் 158 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். 111 பெண் குழந்தைகள் மீட்கப்பட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த 6 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் பிறப்பின் படி பெண் குழந்தைகள் பாலின விகிதம் 2015ஆம் ஆண்டு 886 ஆக இருந்தது, 2020ஆம் ஆண்டு 940 ஆக அதிகரித்துள்ளது. பெண் குழந்தைகள் பிறப்பு பாலின விகிதம் குறைவாக உள்ள வட்டாரங்களில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களுக்கும், ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கும் 'பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' திட்டம் குறித்து ஒருநாள் பயிற்சி நடத்தப்பட்டது.

Girl child seminar held in Cuddalore.

 

பெண் குழந்தைகளின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படுத்துவது தனிமனித, ஒட்டுமொத்த சமூக பொறுப்பாக கொண்டு, அனைவரும் நம் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் செயல்பட வேண்டும். ஆணும் பெண்ணும் சமம்தான் என்பதைப் புரிய வைக்க வேண்டும். இதை கடமையாகச் செய்யாமல் உணர்வுபூர்வமாக எடுத்துச் செல்ல வேண்டும் " என்றார்.

 

முன்னதாக பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி எடுத்தனர். கருத்தரங்கில் கலந்துகொண்ட பல்வேறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கினார்.

 

கருத்தரங்கில் சமூக நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ் பாபு, மக்கள் தொடர்பு அலுவலர் சிவக்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் அன்பழகி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பழனி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமாவளவன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.