
சேலம் அருகே, ஆண் குழந்தை ஆர்வத்தில், பெண் குழந்தையை விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து, சேலம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
சேலம் இரும்பாலை அருகே உள்ள வட்டக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். வெள்ளி பட்டறை வைத்துள்ளார். இவருடைய மனைவி கோமதி (28). இவர்களுக்கு மகாலட்சுமி (3) மற்றும் ஒன்றரை வயதில் கவுசிகா என இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர்.
இந்நிலையில், தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்பதில் கோமதி ஆர்வமாக இருந்தார். இதையே நினைத்து நினைத்து புலம்பியதால் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டார். கணவர் அவருக்கு எவ்வளவு ஆறுதல் சொல்லியும், தேற்ற முடியவில்லை. பெற்றோர் வீட்டில் சிறிது காலம் இருந்து விட்டு வந்தால் மனைவியின் மனநிலையில் மாற்றம் வரும் என்று கருதிய கணவர், பெருமாம்பட்டி கில்லன்வட்டத்தில் உள்ள கோமதியின் பெற்றோர் வீட்டிற்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளையும் கொண்டு சென்று விட்டு விட்டு வந்தார்.
பெற்றோர் வீட்டுக்குச் சென்ற பிறகும், தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்று காண்போரிடம் எல்லாம் சொல்லி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டு, மார்ச் 17ம் தேதி, கோமதி வீட்டில் இருந்த குருணை மருந்தை தண்ணீரில் கலந்து தனது இரண்டு பெண் குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டு தானும் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த மூன்று பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் கோமதியும், மகாலட்சுமியும் உயிர் பிழைத்தனர். கவுசிகா மட்டும் உயிரிழந்தார்.
பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து இரும்பாலை காவல்நிலைய காவல்துறையினர் கோமதி மீது கொலை, கொலை முயற்சி, தற்கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கின் மீதான விசாரணை, சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இருதரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் வியாழக்கிழமை (ஜூன் 23) தீர்ப்பு கூறப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகநாதன், கோமதிக்கு ஆயுள் தண்டனையும், 2500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். தீர்ப்பை கேட்ட கோமதி, நீதிமன்ற வளாகத்திலேயே கதறி அழுதார்.