ADVERTISEMENT

சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழப்பு; உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல அரசு சார்பில் ஏற்பாடு

03:19 PM Jan 08, 2024 | prabukumar@nak…

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டப் பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது. இந்தச் சூழலில் மேங்கோ ரேஞ்ச் பகுதியில் 3 வயது சிறுமி ஒருவர் நேற்று முன்தினம் (06.01.2024) அங்கன்வாடியிலிருந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது அங்கு வந்த சிறுத்தை ஒன்று, அந்த குழந்தையை அங்குள்ள தேயிலைத் தோட்டத்திற்கு இழுத்துச் சென்று தாக்கியது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள், அந்தப் பகுதிக்கு உடனடியாக ஓடி வந்து படுகாயமடைந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், அந்த குழந்தை மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தது. அதேபோன்று கடந்த 21 ஆம் தேதி சிறுத்தை தாக்கியதில் பழங்குடியின பெண் உயிரிழந்த நிலையில், வடமாநிலத் தொழிலாளியின் 3 வயது குழந்தை சிறுத்தை தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது.

ADVERTISEMENT

இந்த சூழலில் அம்ப்ரூஸ் வளைவு என்ற பகுதியில் உள்ள புதர் ஒன்றில் சிறுமியைக் கொன்ற சிறுத்தை பதுங்கி இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டு வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்திருந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர் மற்றும் வன கால்நடை மருத்துவர்கள் குழுவினர், ட்ரோன் கேமரா உதவியுடன் சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து குழந்தையை தாக்கிக் கொன்ற சிறுத்தைக்கு முதல் டோஸ் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இதையடுத்து சிறுத்தையை வனத்துறையினர் பிடிக்க தயார் நிலையில் இருந்தனர். மேலும் ஒரு டோஸ் மயக்க மருந்து செலுத்தப்பட்டு சிறுத்தை பிடிபட்டது. பிடிபட்ட சிறுத்தையை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்ல வனத்துறையினர் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். மேலும் சிறுத்தை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து தலா 10 இலட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்திருந்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில், சிறுத்தை தாக்கி உயிரிழந்த ஜார்காண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி நான்சியின் உடலை சாலை மார்க்கமாக அனுப்பினால் கிட்டத்தட்ட சொந்த ஊர் சென்றடைய 3 நாட்கள் ஆகும். இதனைக் கருத்தில் கொண்டு, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா ஏற்பாட்டில் விமான பயணச்சீட்டு பெற்று, விமானத்தின் மூலம் அவர்களைச் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. நெடுந்தூர பயணம் என்பதால் சிறுமியின் உடலை உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்பாமிங் செய்யப்பட்டு, கோவையிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பப்படுகிறது. பின்னர், அங்கிருந்து ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சிக்கு அனுப்பி வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ராஞ்சியிலிருந்து அவரது சொந்த ஊருக்கு செல்ல ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக ராஞ்சி மாவட்ட ஆட்சியரிடமும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சிறுமியின் பெற்றோர்களிடம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதி ரூபாய் 10 லட்சத்திற்கான காசோலை வழங்கி மாவட்ட ஆட்சியர் ஆறுதல் தெரிவித்தார். இறுதியாக சிறுமியின் உடலை எடுத்துச் செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தந்த தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் சிறுமியின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT