
ஏற்காடு அருகே, பள்ளிச் சிறுமியை இருட்டுப் பகுதிக்கு தூக்கிச் சென்று நண்பர்கள் இருவரும் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம், ஏற்காடு அருகே உள்ள கரடியூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவருக்கு 14 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அந்தச் சிறுமி, அரசுப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஏப். 7 ஆம் தேதி இரவு 8 மணியளவில், அருகில் உள்ள மருந்து கடைக்குச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பவில்லை. இதையடுத்து பெற்றோர், மகளைத் தேடிச் சென்றனர். இதற்கிடையே சிறுமி தானாகவே வீட்டுக்குத் திரும்பி இருக்கிறார். அப்போது அவர் மிகவும் களைத்துப் போய் சோர்வாகக் காணப்பட்டதால், அவரது தாய் விசாரித்துள்ளார்.
அப்போது சிறுமி, தான் மருந்து கடையில் மருந்துகளை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த கொளகூரைச் சேர்ந்த சித்தையன் (24) என்பவர் என்னை அருகே உள்ள இருட்டான பகுதிக்கு வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றார். அங்கு அவருடைய நண்பர் சக்தி (36) என்பவரும் இருந்தார். அவர்கள் இருவரும் சேர்ந்து என்னை மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்து விட்டனர் என்று அழுதுகொண்டே கூறியிருக்கிறார்.
இதைக் கேட்டு அதிர்ந்து போன பெற்றோர், இதுபற்றி தங்களது உறவினர்களிடம் கூறியுள்ளனர். அதையடுத்து சிறுமியின் பெற்றோர், உறவுக்காரர்கள் சித்தையன் மற்றும் சக்தியின் வீட்டுக்குச் சென்று தட்டிக் கேட்டனர். அப்போது அவர்கள் சிறுமியின் பெற்றோரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். காயம் அடைந்த அவர்களை, ஏற்காடு அரசு மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர்.
இதுகுறித்து சிறுமியின் தாய், மல்லூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். சேலம் புறநகர் டி.எஸ்.பி. தையல்நாயகி, காவல் ஆய்வாளர் உஷாராணி ஆகியோர் புகார் குறித்து விசாரித்தனர். இதில், சிறுமியின் தாயார் அளித்த புகாரில் உண்மை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சித்தையன், சக்தி ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
முதல்கட்டமாக சக்தியை கைது செய்துள்ளனர். சித்தையன் தலைமறைவாகிவிட்டார். அவரைத் தேடி வருகின்றனர். சக்திக்கு திருமணமாகிவிட்டது. அவர் சித்தையனுடன் சேர்ந்து பள்ளிச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் ஏற்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.