Girl baby passes away in viluppuram district

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே உள்ளது செண்டூர் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் (38). இவரது மனைவி கீதா (31) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு 8 மற்றும் 6 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கீதாவுக்கும் அவரது கணவர் மோகனுக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் நீண்ட நாட்களாக குடும்பச் சண்டை இருந்து வந்துள்ளது.

Advertisment

இதுகுறித்து மயிலம் காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டு, குடும்பத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, சுமுகமான முறையில் அனைவரையும் அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில், நேற்று (25.04.2021) மீண்டும் கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வீட்டைவிட்டு தன் இளைய மகளுடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்த கீதா, அவர்களது விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் தனது இளைய மகளின் கையைப் பிடித்துக்கொண்டு குதித்துள்ளார்.

Advertisment

அப்போது குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் வயலில் வேலை செய்துகொண்டிருந்த கிராம மக்கள் ஓடிச்சென்று கிணற்றில் குதித்து கீதாவை உயிருடன் மீட்டுள்ளனர். ஆனால், அவருடன் சேர்ந்து குதித்த குழந்தை, கிணற்றில் மூழ்கி மாயமானார். அவரை தேடி கண்டுபிடிக்க முடியாததால், திண்டிவனம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அந்தக் கிணற்றில் குதித்து நீண்ட நேரம் தேடி அந்தக் குழந்தையை சடலமாக மீட்டனர். மேலும், குழந்தையின் உடலைப் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், மயிலம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை எண்ணத்தோடுகுழந்தையுடன் தாய் கிணற்றில் குதித்ததில், தாய் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.