
பொள்ளாச்சியில் முதல்முறையாக போக்சோ சட்டத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சியைச் சேர்ந்த கிருத்திகா என்ற 19 வயது பெண் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) அங்குள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்த நிலையில், அந்த பங்கிற்கு அதே பகுதியைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் அடிக்கடி பைக்கில் பெட்ரோல் போட சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில், 17 வயது சிறுவனிடம் தனது காதலைக் கீர்த்திகா தெரிவித்துள்ளார். அதனையடுத்து திடீரென சிறுவனுக்குக் குடலிறக்க நோய் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அந்த மாணவரை உடனிருந்து கிருத்திகா கவனித்துக் கொண்டதாக கூறப்பட்ட நிலையில், அந்த சிறுவனுக்கும் அவர் மீது அளவு கடந்த அன்பு இருந்துள்ளது.
இந்நிலையில் சிறுவன் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வெளியேறியதும் பழனி கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார் கிருத்திகா. அங்கு, நம்மை பெற்றோர்கள் பிரிக்காமல் இருக்க வேண்டுமானால் நாம் உடனடியாக திருமணம் செய்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தி அந்த மாணவரை கழுத்தில் தாலிகட்ட வைத்துள்ளார். பின்னர் கோவை வந்த இருவரும் தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில் தங்களது மகனைக் காணவில்லை என பொள்ளாச்சி காவல் நிலையத்தில் சிறுவனின் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் அந்த பெண்ணின் செல்போன் எண்ணை வைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
அதனைத்தொடர்ந்து கோவைக்கு சென்று இருவரையும் பொள்ளாச்சி போலீசார் கைது செய்து சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர். விசாரணையில் கிருத்திகா கோவிலுக்குத் தன்னை சாமி கும்பிட அழைத்துச் சென்றதாகவும் அங்கு வைத்து தனது கையில் தாலியைக் கொடுத்து கட்டாயப்படுத்தித் தாலி கட்ட வைத்ததாகவும், பாலியல் ரீதியாக தன்னிடம் நடந்துகொண்டதாகவும் 17 வயது மாணவர் போலீசில் தெரிவித்தார். அதன்பிறகு கிருத்திகாவைப் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். கோவையில் கட்டாயத் திருமணம் செய்ததாக ஒரு பெண் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வரத்தினம் தெரிவித்துள்ளார்.