
ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கூலித் தொழிலாளி ஒருவர் தனது மனைவி, இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். இவரது மகள்கள் இருவரும் ஊஞ்சலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இரண்டு மகள்களில் ஒருவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கூலித் தொழிலாளி தனது மகளை கொம்பனை புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பதை கண்டு மருத்துவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மருத்துவர் இது குறித்து சிறுமியின் பெற்றோரிடம் கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் நடந்த சம்பவம் குறித்து சிறுமியிடம் கேட்டனர்.
அப்போது அந்த சிறுமி கடந்த 5 மாதத்திற்கு முன்பு கவுந்தப்பாடி அடுத்த பி.மேட்டுப்பாளையத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றிருந்ததாகவும், அப்போது சம்பவத்தன்று தனியாக தான் வீட்டில் இருந்தபோது முகத்தில் மாஸ்க் அணிந்து வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறினார். இதன் காரணமாகவே சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து கோபி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.