Gingee

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது அறியலூர் திருக்கை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த ராமன் என்பவரின் மகள் 35 வயது அஞ்சலாட்சி. இவர் மனநலம் பாதித்தவர். இவர் தற்போது இவருடைய அண்ணி சங்கீதா என்பவருடைய பராமரிப்பில் இருந்து வருகிறார். அவரது அண்ணி சொல்லும் வேலைகளை மட்டும் செய்து வரும் அஞ்சலாட்சியை மனநலம் பாதித்தவர் என்பதால் வெளியில் எங்கும் அனுப்புவது இல்லை.

Advertisment

இந்த நிலையில் தங்கள் கிராமத்தில் நடக்கும் மத்திய அரசின் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு அஞ்சலாட்சியை அவரது அண்ணி சங்கீதா அவ்வப்போது அழைத்துச் செல்வது வழக்கம். வேலை முடிந்த பிறகு சங்கீதா அவர்களது சொந்த வயலில் வேலை செய்வதற்கு செல்லும்போது அஞ்சலாட்சியை மட்டும் தனியாக வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இப்படி தனியாக வரும் அஞ்சலாட்சியை தினசரி நோட்டமிட்ட அதே ஊரைச் சேர்ந்த வீரமணி என்பவரது மகன் சங்கர் (வயது 35) வழிமறித்து அஞ்சலாட்சியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதில் அஞ்சலாட்சி கர்ப்பமாகியுள்ளார். கர்ப்பமாக இருப்பதை அறிந்த சங்கீதா அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் சங்கீதா. மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து அஞ்சலாட்சியின் கர்ப்பத்திற்கு காரணமாக இருந்த சங்கரை கைது செய்து நீதிமன்றம் மூலம் சிறைக்கு அனுப்பி உள்ளனர்.

Advertisment

அஞ்சலாட்சியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட சங்கருக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ஒரு மனநலம் பாதித்த பெண்ணை மனசாட்சியே இல்லாமல் அவரது மனநிலை சரிஇல்லாததை பயன்படுத்தி அவரது கற்புக்கு காரணமாகி உள்ள சங்கருக்கு சட்டத்தின் மூலம் கடும் தண்டனை கிடைக்க வேண்டும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.