இந்தியாவிற்கான ஜெர்மனி தூதர் வால்டர் மின்டர் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக திருச்சி ஸ்ரீரங்கத்திற்கு வந்து சென்றுள்ளார். நேற்று முன்தினம் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்த அவர் கோவில்களை முழுமையாக சுற்றிப்பார்த்து, அங்குள்ள ஒவ்வொரு சன்னிதானத்திற்கும் சென்று பார்வையிட்டு தரிசனம் செய்து, அங்குள்ள கோவில் ஊழியர்களிடம் கலந்துரையாடினார்.
மேலும் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களோடு கலந்துரையாடி அவர்களோடு புகைப்படங்களை எடுத்துக்கொண்டு மகிழ்ந்துள்ளார். இரண்டாவது நாளாக அவர் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் உள்ள காவிரி கரையை கண்டு ரசித்த பின்னர், அங்கு உள்ள புரோகிதர்களிடம் கலந்துரையாடி அவர்களது மந்திரங்களை கேட்டு ரசித்த அவர்களோடு புகைப்படம் எடுத்து மகிழ்ந்துள்ளார்.
அம்மா மண்டபத்திற்கு வந்த அவருக்கு காவிரியாற்றின் பெருமையையும் அம்மா மண்டபத்தின் சிறப்புகள் குறித்தும் அப்பகுதி தூய்மையாக பராமரிக்கப்படுவது குறித்தும் அதிகாரிகள் மூலம் கேட்டறிந்தார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு கரோனா நோய் தாக்கத்தால் ஏற்பட்ட ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சமாளிக்க டெல்லியில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட ஆக்சிஜன் தயாரிக்கும் நிலையத்தை திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது. நேற்று மாலை தன்னுடைய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு மீண்டும் அவர் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்.