Skip to main content

நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் மீண்டும் போராட்டம்: ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் மு.அன்பரசு

Published on 07/12/2018 | Edited on 07/12/2018
j


அரசு ஊழியர்-ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து வருகின்ற டிச.10 ஆம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என்றார் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரும், ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளருமான மு.அன்பரசு.

 

புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை காந்திநகர், திருவரங்குளம் ஒன்றியம் தெற்குத் தோப்புப்பட்டி, ஆலடிக்கொல்லை உள்ளிட்ட இடங்களில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மாநிலப் பொதுச் செயலாளர் மு.அன்பரசு, துணைத் தலைவர் மு.சுப்பிரமணியன், செயலாளர் ஏ.பெரியசாமி, மாவட்டத் தலைவர் எஸ்.ஜபாருல்லா, செயலாளர் ஆர்.ரெங்கசாமி, பொருளாளர் கே.குமரேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். நிவாரணப் பணிகளுக்கிடையோ செய்தியாளர்களிடம் அன்பரசு பேசியது:

 

மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெரும் நாங்கள் எங்களின் ஒருநாள் ஊதியமான சுமார் நூறு கோடி ரூபாயை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அளித்துள்ளோம். மேலும், அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நிவாரணப் பொருட்களை சேகரித்து கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வருகிறோம். 

 

கடந்த 2016-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதியமே தொடரும் என்ற அறிவிப்பு இதுவரை தமிழக அரசு செயல்படுத்தவில்லை. எங்கள் கோரிக்கை எதுவும் நிறைவேற்றப்படாததால் நாங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தோம். நீதிமன்றத்தின் தலையீட்டின் காரணமாக போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளோம்.

 

வரும் 10 தேதி நீதிமன்றத்தில் எங்கள் கோரிக்கைகளை பரிசீலித்து அறிக்கை தாக்கல் செய்யப்படாவிட்டால் மீண்டும் எங்களது கால வரையற்ற போராட்டத்தைத் தொடருவோம். ஜெயலலிதா அறிவித்த எந்தத் திட்டத்தையும் அவரது மறைவுக்குப் பிறகு இந்த அரசு நடைமுறைப் படுத்தப்படவில்லை என்றார். 


            
 

சார்ந்த செய்திகள்

Next Story

'நிதி நிலைமை சீரடைந்ததும் பரிசீலிக்கப்படும்' - தங்கம் தென்னரசு கோரிக்கை

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
'Will be considered when the financial situation stabilizes'-Thangam Tennarasu demand

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசு போராட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை வைத்துள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26 ஆம் தேதி முதல் 'ஜாக்டோ ஜியோ' ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எ.வ. வேலு, ஜாக்டோ ஜியோ சங்க உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை விட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசு ஊழியர்களின் தேவைக்கேற்ப பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிதிநிலைக்கு ஏற்ப அரசு பணிவுடன் பரிசீலிக்கும்.

கலைஞர் வழி நடக்கும் அரசு, ஊழியர்களின் நலனை எப்போதுமே கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது. அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அரும்பணியை மேற்கொள்ளும் அரசு ஊழியர்களின் முக்கியத்துவத்தை அரசு உணர்ந்தே இருக்கிறது. எனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிட்டு அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். அரசுக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

தலைமைச் செயலகம் முற்றுகைப் போராட்டம்; ‘ஜேக்டோ – ஜியோ’ அறிவிப்பு

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
Jacto-Jio has announced that it will besiege the tn Secretariat on 28th

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நேற்று தமிழ்நாடு ஆசிரியர், அரசு ஊழியர் இயக்கங்களின் ஜேக்டோ – ஜியோ சார்பில் மாநில உயர்மட்டக் குழு மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ் வரவேற்றார். அன்பரசு தலைமை தாங்கினார், வி.எஸ். முத்து ராமசாமி முன்னிலை வகித்தார். 

கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் காலத்திலும், ஜாக்டோ – ஜியோ மாநில மாநாட்டிலும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிட வலியுறுத்தி வருகிற 28 ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெறும். மேலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும்; இடைநிலை ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்; அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்திற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்; உள்ளாட்சி அமைப்புகளிலும் பல்வேறு அரசுத் துறைகளிலும் தனியார் முகமை மூலம் பணியாளர்களை நியமனம் செய்வதை உடனடியாக தடை செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொருளாளரும், மாவட்ட ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளருமான திருச்சி நீலகண்டன் உட்பட நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர். முடிவில் மாநில ஒருங்கிணைப்பாளர் வின்சென்ட் பால்ராஜ் நன்றி கூறினார்.