
சென்னையில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக வளாகத்தில் உள்ள பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை ஆய்வகத்தில் கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள மரபணு பகுப்பாய்வுக் கூடத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (14/09/2021) திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்புப் பணி அலுவலர், தேசிய நல்வாழ்வு குழுமத்தின் திட்ட இயக்குனர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் 91 இளநிலை உதவியாளர்களுக்குக் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் வழங்கினார். இந்தியாவில் கரோனா வைரஸின் உருமாற்றத்தைக் கண்டறிய 11 வது ஆய்வகமாக சென்னை ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது. நவீன கருவிகளைக் கொண்ட ஆய்வகத்தில் பெங்களூருவில் பயிற்சி முடித்த 6 பேர் உள்பட 10 பேர் கொண்ட குழு பணியாற்றுகிறது.
இந்த ஆய்வகம் மூலம் டெல்டா பிளஸ் கரோனா வைரஸை விரைவில் கண்டறியலாம். ஒரே நேரத்தில் 1,000 மாதிரிகளைப் பரிசோதனை செய்வதற்கான திறன் சென்னை ஆய்வகத்தில் உள்ளது.