
காவல் இணை ஆணையரே பாலியல் புகாரில் சிக்கியுள்ள சம்பவம் தமிழக காவல்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையராக பணியாற்றி வந்தவர் டி.மகேஷ்குமார். ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் காவலர், காவல் இணை ஆணையர் மகேஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து மகேஷ்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் மகேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து டிஜிபி சங்கர் ஜீவால் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே பெண் டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் விசாரணை நடத்தவும் விசாகா கமிட்டியும் அமைக்கப்பட்டது. பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டில் சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.