/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_4315.jpg)
தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக அறியப்பட்ட கௌதமி பாஜகவில் இணைந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில், நடிகை கௌதமி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தனது 25 கோடி மதிப்பிலான சொத்துகள் மோசடி செய்யப்பட்டதாக புகார் அளித்திருந்தார்.
அதில், “நான் திரைத்துறையில் சம்பாதித்த பணத்தின் மூலம் சில இடங்களில் நிலம் வாங்கினேன். கடந்த 2004 ஆம் ஆண்டு நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது, எனது மகளின் பராமரிப்பு செலவுக்காகவும், எனது மருத்துவச் செலவுக்காகவும் அந்த இடங்களை விற்க முடிவு செய்தேன். அதற்கு பாஜகவைச் சேர்ந்த, கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் அழகப்பன் என்பவர் உதவி செய்வதாகக் கூறினார். அதனால் எனது சொத்துக்களை விற்கும் உரிமையை அவருக்கு கொடுத்தேன். அதற்காக என்னிடம் பல பத்திரங்களில் கையெழுத்து வாங்கினார். ஆனால் அதன் மூலம் போலி பத்திரங்களைத் தயார் செய்து அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் எனது சொத்துக்களை அபகரித்துவிட்டனர். இது குறித்து கேட்டபோது எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்” என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் கடந்த 23ம் தேதி அவர் பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “25 ஆண்டுக் காலமாக பா.ஜ.க.வில் இருந்தேன். அழகப்பன் என்பவர் என்னை மிரட்டி சொத்துகளைப் பறித்தார். இன்று நான் என் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு நெருக்கடியான கட்டத்தில் நிற்கிறேன். கட்சி மற்றும் தலைவர்களிடமிருந்து எனக்கு எந்த ஆதரவும் இல்லை. அதுமட்டுமல்லாமல், என் நம்பிக்கைக்கு துரோகம் செய்து, என் வாழ்நாள் சம்பாத்தியத்தை ஏமாற்றிய ஒருவருக்கு (அழகப்பன்) கட்சியில் பலர் தீவிரமாக உதவுகிறார்கள்.அந்த ஏமாற்றுக்காரருக்கு நெருங்கிய நண்பராக இருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். மன வேதனையுடன் கட்சியிலிருந்து வெளியேறுகிறேன்” எனத் தெரிவித்து கட்சியில் இருந்து அவர் விலகினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_4894.jpg)
இதனைத் தொடர்ந்து நடிகை கௌதமி கொடுத்த புகாரின் அடிப்படையில் பா.ஜ.க. பிரமுகர் அழகப்பன், அவரது மனைவி நாச்சாள் அழகப்பன், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, பாஸ்கர், சதீஷ்குமார் ஆகிய 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (31ம் தேதி) காரைக்குடி அருகே உள்ள கோட்டையூரைச் சேர்ந்த அழகப்பன் வீட்டில் ஏ.சி. ஜான் விக்டர் தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அழகப்பனிடமும் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)