
இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100, சில மாநிலங்களில் இதையும் தாண்டிவிட்டது. சமையல் எரிவாயு விலையும் இந்த மாதம் மட்டும் 70 ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது. சரக்கு போக்குவரத்துக்கான டீசல் விலையும் உயர்ந்து வருகிறது. ஏற்கனவே கரோனாவால் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளது. தொழில்கள் நசிந்துள்ளன, மக்களிடம் வாங்கும் சக்தி வெகுவாக குறைந்துள்ளது. தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களான காய்கனிகள், மளிகை பொருட்கள் விலையும் கிடுகிடுவென உயர்ந்து, நடுத்தர மக்களுமே பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை மக்கள் ஒருவேளை உணவையே சரியாக சாப்பிட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மத்தியில் ஆளும் பாஜக அரசின் பொருளாதார கொள்கையால்தான் இந்த விலை உயர்வு என்றும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையைக் குறைக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் விலைவாசி உயர்வைக் கண்டித்துப் போராட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி பிப்ரவரி 22ஆம் தேதி போராட்டங்கள் நடைபெற்றன.
திருவண்ணாமலையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியினரை தாண்டி வியாபாரிகளும், பொதுமக்களும் வந்து கலந்துகொண்டனர். வரலாறு காணாத அளவில் பெட்ரோல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்தும், அதனைக் குறைக்க நடவடிக்கை எடுக்காத மத்தியில் ஆளும் பாஜக அரசையும், மாநில ஆளும் அதிமுக அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். விலையைக் குறைக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பேசினர்.

இதுகுறித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக மா.செ வேலு பேசும்போது, “கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. ஆனால் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக்கொண்டே வருகின்றனது மத்திய – மாநில அரசுகள். இதனால் நாம் வாங்கும் பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய், கத்தரிக்காய், தக்காளி, வெங்காயத்தின் விலை உயர்ந்துகொண்டே இருக்கின்றன.
ஏழை மக்கள் வாங்க முடியாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. இதனால் ஒருவேளை சாப்பாட்டைக் கூட சரியாக சாப்பிட முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பவனால் கூட வீட்டுக்கு மளிகை பொருளை வாங்க முடியவில்லை. இதற்கெல்லாம் காரணம் மத்தியில் ஆளும் பாஜக அரசும், அடிமையாக கிடக்கும் எடப்பாடி பழனிசாமியின் அதிமுக அரசும்தான்.
நம் வீட்டுப் பெண்கள் விறகு அடுப்பில் சமைத்து கண் எரிச்சல், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு ஆளாகிறார்கள். அவர்களால் படிக்க முடியவில்லை. வேலைக்குச் செல்ல முடியவில்லை. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்பதை 20 ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்த மறைந்த தலைவர் கலைஞர், முதல்வராக இருந்தபோது, இலவசமாக எரிவாயு சிலிண்டர் வழங்கினார். அந்த எரிவாயு விலையும் உயர்ந்துகொண்டே வந்து இப்போது, 800 ரூபாய்க்கு விற்கிறார்கள் இந்த ஆட்சியாளர்கள். இதனால் நம் பெண்கள் மீண்டும் விறகு அடுப்புக்கு மாறும் நிலையை இந்த ஆட்சியாளர்கள் உருவாக்கிவிட்டார்கள். மக்களாகிய நீங்கள் இந்த ஆட்சியாளர்கள் பற்றி உணர வேண்டும். மக்களுக்கான அரசாக என்றும் திமுகவே நிற்கும்” என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.