
சேலம் கருங்கல்பட்டியில் காஸ் சிலிண்டர் வெடித்து வீடுகள் தரைமட்டமான விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு அரசு நிவாரண உதவி அறிவித்துள்ளது.
சேலம் கருங்கல்பட்டியில் நேற்று (23.11.2021) காலையில் சமையல் காஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் நான்கு வீடுகள் அடுத்தடுத்து இடிந்து தரைமட்டமாகின. செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் பத்மநாபன், அவருடைய மனைவி தேவி, கார்த்திக்ராம், எல்லம்மாள், ராஜலட்சுமி ஆகிய ஐந்து பேர் உயிரிழந்தனர்.
இடிபாடுகளில் சிக்கியதில் 15 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்குத் தலா 5 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து சிகிச்சையில் இருப்போருக்குத் தலா 50 ஆயிரம் ரூபாயும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், சிகிச்சையில் இருப்போருக்கும் ஆறுதலும் தெரிவித்துள்ளார்.