Gang stealing bundles of grain brought by farmers for sale!

Advertisment

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் பகுதியில் தமிழக அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அரகண்டநல்லூர் பகுதியைச் சுற்றிலும் உள்ள சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் விளைவிக்கும் நெல், மணிலா, உளுந்து, எள்ளு, கம்பு போன்ற தானியங்களை கொண்டு வந்து விற்பனை செய்து விட்டு செல்வார்கள்.

இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினசரி சுமார் 20 லட்சம் முதல் இரண்டு கோடிவரை விவசாயிகள் கொண்டுவரும் தானியங்கள் விற்பனையாவது வழக்கம். இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த சில நாட்களாக விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டுவரும் தானிய மூட்டைகள் திருடப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தத் திருட்டு சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனால் விவசாயிகள் தாங்கள் கொண்டுவரும் விளைபொருட்களை பாதுகாப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் விவசாயிகளிடம் இருந்து விலைக்கு வாங்கப்பட்ட தானிய மூட்டைகளை ஒழுங்குமுறை விற்பனை கூட குடோனில் அடுக்கி வைத்திருந்தனர். அந்த குடோனில் சந்தேகப்படும்படியான நிலையில் இரு இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் ஒரு மூட்டை ஒன்றை ஏற்றிக்கொண்டு வேகமாக செல்ல முயற்சித்தனர். இதை தற்செயலாக பார்த்த வியாபாரிகள் சந்தேகமடைந்து, அவர்கள் இருவரையும் மடக்கிப் பிடிக்க துரத்தினர். இருவரில் ஒருவர் மட்டும் பிடிபட்ட நிலையில், அவரிடம் விசாரித்தனர்.

Advertisment

அவர்கள் இருவரும் அருகிலுள்ள வசந்த கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த அன்பரசு, ரெனால்ட் என்பது தெரியவந்தது. இதில் அன்பரசு தப்பி ஓடி விட்டார். ரெனால்டு மட்டும் சிக்கி உள்ளார். அவரை கமிட்டி உறுப்பினர்கள் அரகண்டநல்லூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தியதோடு மார்க்கெட் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் மேற்படி இரு இளைஞர்களும் குடோனில் இருந்து ஒரு மூட்டை உளுந்தை தூக்கி தாங்களது இருசக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து பிடிபட்டவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.