Advertisment

வாட்ஸ்-அப் குழு அமைத்து காட்டு முயலை வேட்டையாடிய கும்பல்; 107 பேர் மீது வழக்கு

A gang set up a WhatsApp group for wild rabbit; Case against 107 people

ஈரோடு வனச்சரகத்துக்கு உட்பட்ட பெருந்துறை அருகே உள்ள தோரணாவாவி, தொட்டிப்பாளையம் கிராமத்தில் உள்ள பட்டா நிலங்களில் கும்பல் கும்பலாக முயல்கள் வேட்டையாடுவதாக, தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின கட்டுப்பாடு கோவை மண்டல அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பாதுகாவலருக்கு உத்தரவிடப்பட்டது.

Advertisment

இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட வனபாதுகாப்பு படையினர், ஈரோடு வனச்சரக குழுக்கள், ஈரோடு வனவியல் விரிவாக்க கோட்ட குழுக்கள் உள்பட பல்வேறு வனச்சரக குழுவினர் தொட்டிபாளையம் கிராமத்துக்கு சென்று கண்காணித்தனர். அப்போது ஒரு வாட்ஸ்-அப் குழு அமைத்து முயல் வேட்டையாடுவது வனத்துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் அந்த கும்பலை கண்காணித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பட்டா நிலங்களில் கும்பல் கும்பலாக ஏராளமானோர் காட்டு முயலை வேட்டையாடிக்கொண்டிருந்ததையடுத்து வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து மொத்தம் 107 பேரை பிடித்தனர். அவர்கள் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisment

அவர்கள் வேட்டையாடி வைத்திருந்த 5 முயல்கள் மற்றும் வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கம்புகள், ஏராளமான செல்போன்களையும் வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பிடிபட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கோவில் திருவிழாவையொட்டி குறிப்பிட்ட சமூகத்தினர் காட்டு முயலை வேட்டையாடுவதை வழக்கமாக கொண்டிருப்பதாகவும், அதன்படி இந்தாண்டு திருவிழாவையொட்டி வேட்டையாட வந்ததாகவும், இது ஒரு பாரம்பரியமான நிகழ்ச்சி என்றும் கைது செய்யப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, பொதுவாக வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாடுவது மிகப்பெரிய குற்றமாகும். முயல் வேட்டையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இவர்கள் வனப்பகுதியில் வேட்டையாடவில்லை. பட்டா நிலங்களில் தான் வேட்டையாடி உள்ளனர். இருந்தாலும் இதுவும் சட்டப்படி தவறுதான். எனவே 107 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் மீது அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

Erode
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe