
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18ம் தேதி கொண்டாடப்பட்டது. இதனையொட்டி ஈரோட்டில் இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் 1,429 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில், ஈரோடு மாநகரில் மட்டும் 185 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்புப் பூஜைகள் மற்றும் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஈரோடு மாநகரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று மாலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது. இதற்காக மாநகரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 185 விநாயகர் சிலைகளும் ஈரோடு சம்பத் நகருக்கு நேற்று வாகனங்களில் கொண்டு வரப்பட்டது. பின்னர், ஊர்வலமானது ஈரோடு சம்பத் நகர் நால் ரோட்டில் துவங்கி, பெரியவலசு நால்ரோடு, முனிசிபல் காலனி, மேட்டூர் சாலை, மீனாட்சி சுந்தரனார் சாலை, காமராஜர் சாலை, ஈஸ்வரன் கோவில் வீதி, ஆர்.கே.வி. சாலை, காவிரி சாலை, கருங்கல்பாளையம், கருங்கல்பாளையம் போலீஸ் சோதனைச் சாவடி வழியே காவிரி ஆற்றின் பழைய பாலம் பகுதிக்குச் சென்றடைந்தது. அங்கு ஒவ்வொரு சிலைகளாக ஆற்றில் கரைக்கப்பட்டது.
காவிரி ஆற்றில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தீயணைப்புத் துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். ஊர்வலத்திற்கும், ஊர்வலம் செல்லும் பாதைகளிலும் அசம்பாவித சம்பவங்களைத்தடுக்க 500 போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர். ஊர்வலத்துக்காக போக்குவரத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ஊர்வலம் செல்லும்போது அந்த சில மணி நேரம் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு, மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது. மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 1,429 சிலைகளில் நேற்று வரை 770 சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Follow Us