Skip to main content

“கீழ்பவானி பாசன கால்வாயில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்கக் கூடாது..” விவசாயிகள் கோரிக்கை 

Published on 28/08/2021 | Edited on 28/08/2021

 

"Ganesha idols should not be allowed to dissolve in Keelbhavani irrigation canal." Farmers demand

 

‘விநாயகர் சிலைகள் கரைப்பு என்ற பெயரில் வாய்க்கால்களை சேதப்படுத்துவதோடு மக்களின் குடிநீர் தேவை, கால்நடைகளின் குடிநீர் தேவை, விவசாய பயன்பாடு, அதில் விளையும் பயிர்கள் என எல்லாவற்றையும் நாசப்படுத்துகிறார்கள். நீர் மாசுபடுவதைத் தடுக்கவும், சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பு போன்றவற்றில் அதிக அக்கறையுடன் செயல்பட தொடங்கியுள்ள புதிய அரசான திமுக அரசு, இதில் முழுமையான கவனத்தை செலுத்த வேண்டும்’ என தமிழ்நாடு முழுக்க விவசாய அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துவருகின்றன. 

 

வருகிற 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுக்க கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த இருபது, இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்புவரை விருப்பப்பட்ட மக்கள் அவர்கள் வீடுகள் முன்பு மாட்டுச் சாணியில் கைப்பிடி அளவுக்கு ஒரு உருவம் பிடித்து அதைப் பிள்ளையாராக வழிபட்டு, பிறகு அந்த வறண்ட சாணி தட்டுகளை நீர் நிலைகளில் கொண்டு போய் விடுவார்கள். அதேபோல் சில பகுதிகளில் பொதுவாக உள்ள கோயில்களில் களிமண்ணால் விநாயகர் சிலை அமைத்து, அதை வழிபட்டு, பிறகு நீர் நிலைகளில் கரைப்பார்கள்.

 

மும்பை போன்ற வட மாநிலங்களில்தான் பெரிய பெரிய விநாயகர் சிலைகள் வீதிகள் தோறும் வைக்கப்பட்டு, சில நாட்களுக்குப் பிறகு ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளில் கொண்டுபோய் கரைப்பார்கள்.

 

1991இல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அந்தக் கலாச்சாரம் தமிழ்நாட்டிற்குள்ளும் புகுந்தது. குறிப்பாக கோவை குண்டுவெடிப்பை தொடர்ந்து ஏற்பட்ட மத வன்முறை, கலவரங்களுக்குப் பிறகு 2001ஆம் ஆண்டுக்குப் பிறகு பொது இடத்தில் விநாயகர் சிலை வைத்தும் சில நாட்களுக்குப் பிறகு அச்சிலைகளை வீதிகளில் கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வுகளும் நடக்கத் தொடங்கின. 

 

இது ஒருபுறம் இருக்க, ரசாயன விநாயகர் சிலைகள் கரைப்பால் மண்ணுக்கும், நீருக்கும், இயற்கைக்கும் கேடு என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார்கள். இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர் பாய்ந்தோடும் கீழ்பவானி வாய்கால், கீழ்பவானி முறை நீர்ப் பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்புச் செயலாளர் வடிவேல், தமிழக விவசாய சங்கத்தின் மாவட்டத் தலைவர் துரைசாமி, தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பொன்னையன், தமிழக விவசாய சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சுப்பு ஆகியோர் கூட்டாக ஈரோடு ஆட்சியர் கிருஷ்ணனுண்ணிக்கு கடிதம் மூலம் மனு கொடுத்துள்ளார்கள். 

 

பிறகு விவசாயிகள் அமைப்பு பொன்னையன் கூறும்போது, “கீழ்பவானி பாசன கால்வாய் நீர் ஆடு, மாடு போன்ற கால்நடைகளும், ஐந்து லட்சம் மக்களின் குடிநீர் தேவையையும், மூன்று லட்சம் ஏக்கர் பாசன பரப்பு, விவசாய பயன்பாடு என பல்வேறு வகைகளிலும் பயன்படுத்தப்பட்டுவருகிறது. மொத்தம் 200 கிலோமீட்டர்  நீளத்திற்கு இந்தத் தண்ணீர் பாய்ந்து செல்கிறது. 

 

வருகிற செப்டம்பர் மாதம் 10ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவில் பல்வேறு ஊர்களில், இடங்களில் விநாயகர் சிலையை வைத்து நிகழ்ச்சிகள் நடத்த உள்ளனர். இறுதியில் அந்தச் சிலைகளை மொத்தமாக சேகரித்து அந்தந்த ஊர் அருகே ஒடும் கீழ்பவானி முதன்மை கால்வாயில் அதாவது  ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களின் பல இடங்களில் கால்வாயில் கொண்டுவந்து போடுகின்றனர். இதனால் முதலில் கால்வாயின் தடையற்ற தண்ணீர் ஓட்டம் பாதிக்கப்படும். அடுத்து தண்ணீர் பொங்கி கால்வாய் உடையும் ஆபத்தும் ஏற்படும். மூன்றாவதாக விநாயகர் சிலைகளில் பயன்படுத்தப்படும் ‘பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்’ கரைந்து மதகுகளில் அடைப்பை ஏற்படுத்தி நீர் வெளியேறுவதை தடுக்கிறது.

 

சிலைகளில் பயன்படுத்தப்படும் ரசாயன பொருட்கள் தண்ணீரில் கரைந்து நாற்றங்காலில் முளைத்துவரும் இளம் நாற்றுகளை கருகச் செய்து பெரும் சேதத்தை உருவாக்கிவிடும். எனவே நீரை விஷமாக்கி இயற்கை சூழலை அழிக்கிறது. கால்வாயின் நீரோட்டம் தடுக்கப்படுகிறது. ஆகவே விநாயகர் சிலைகளை எந்தப் பகுதியிலும் கால்வாயில் கரைக்க ஈரோடு மாவட்ட நிர்வாகம் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது என்கிறோம்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்