/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_1935.jpg)
தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் வருகிற 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளன. இதற்காக அனைத்து பகுதிகளிலும் மனு தாக்கல் முடிந்து, தேர்தல் பரப்புரைகளும் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. 4ஆம் தேதியான இன்று மாலையுடன் அப்பரப்புரைகளும் முடிவுபெறுகின்றன.
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம், பெரியபகண்டை ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு அரிகிருஷ்ணன் (68) என்பவர் போட்டியிடுகிறார். இவரது வீட்டில் வாக்காளர்களுக்குத் தருவதற்காக பல்வேறு பரிசு பொருட்களைப் பதுக்கிவைத்திருப்பதாக ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் வந்தது. அத்தகவலின் பேரில் திருக்கோவிலூர் துணை தாசில்தார் விஜயன் தலைமையிலான பறக்கும் படையினர் பெரியபகண்டை ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் அரிகிருஷ்ணன் வீ்ட்டில் சோதனை நடத்தினர்.
இதில், வீட்டில் பதுக்கிவைத்த 14 விநாயகர் மரச்சிற்பம், 8 துண்டுகள், 14 மஞ்சள் கயிறு, குங்குமம், மஞ்சள், 187 பூட்டு - சாவி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். விசாரணையில், அவற்றை வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்தது உறுதியானது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் ரூ. 20 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. பின்னர் அவற்றை பகண்டை கூட்டுரோடு காவல் நிலையத்தில் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)