Advertisment

"விவேக் கொடுத்த அந்த பரிசு..." - தமிழருவி மணியன் நெகிழ்ச்சி!

gandhi makkal iyakkam chief tamilaruvimanian tweet actor vivek tributes

Advertisment

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு இரங்கல் தெரிவித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனத்தலைவர் தமிழருவி மணியன், "விவேக்கும் நானும்... ஓராண்டுக்கு முன்பு தனியார் இதழுக்கு விவேக் வழங்கிய நேர்காணலில் 'நம் மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு இல்லை. தமிழருவி மணியன் என்ற நேர்மையாளருக்கு என்ன அங்கீகாரத்தை இவர்கள் தந்து எந்தப் பதவியில் அமர்த்தி அழகுப் பார்த்தனர்? என்று கேட்டிருந்ததைக் கண்டு நான் வியந்தேன். அவருக்கும் எனக்கும் அன்று வரை நேரடித் தொடர்பு இருந்ததில்லை. நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி சொன்னேன்.

ஒருநாள் என்னைப் பார்த்துப் பேச என் வீட்டிற்கு வருவதாகச் சொன்னார். 'எதற்காக என்னைப் பார்க்க விரும்புகிறீர்கள்?' என்று கேட்டேன். அவருடைய வீட்டில் வாடகைக்குக் குடியிருந்த ஒரு எழுத்தாளர் காலி செய்ய மறுத்ததால் மன உளைச்சலுக்காளானவர் உறக்கமின்றி தவித்த நிலையில் அவரது நண்பர் ஒருவர் நான் எழுதிய 'மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்' என்ற நூலைப் படிக்கும் படிப் பரிந்துரைத்திருக்கிறார்.

ஐயா... 'அந்த எழுத்தாளரால் நான் நிம்மதியின்றித் தவித்தேன். அந்த நேரத்தில் உங்கள் நூலை நண்பர் சொன்னதால் வாசித்தேன். நான் தேடிய மன அமைதியை அந்த நூலை வாசித்ததால் பெற்றேன். ஒவ்வொரு இரவும் அந்த நூலை வாசிக்கிறேன். உங்களைப் பார்த்து பேச வேண்டும் என்ற ஆவல் என்னுள் அதிகரித்தது' என்றார் விவேக்.

Advertisment

ஒரு சிறிய குடியிருப்பில் பெரிய வசதிகளற்ற நிலையில் வாழும் நான் பிரபலங்களின் வருகையைத் தவிர்த்து விடுவது என் வழக்கம். அவர்கள் வருகை மூலம் என்னைப் பெருமைப் படுத்திக்கொள்ளும் மலினமான மனநோய் என்றும் எனக்கு இருந்ததில்லை. ரஜினிகாந்த் என் வீட்டிற்கு வர விரும்பிய போதும் நான் உடன்படவில்லை. விவேக்கை அவரது வீட்டில் நான் வந்துச் சந்திப்பதாகத் தெரிவித்தேன்.

ஒரு நாள் சாலிகிராமத்தில் உள்ள அவருடைய வீட்டிற்குச் சென்றேன். மனம் நெகிழ்ந்து வாசலில் நின்று வரவேற்றார். ஒருமணி நேரம் இருவரும் பேசினோம். அவருடைய பல்துறை அறிவாற்றலும், மனித நேயமும், சமூக நலனில் அவருக்கிருந்த உண்மையான அக்கறையும், தூய்மையான அரசியல் இந்த மண்ணில் மீண்டும் மலர வேண்டும் என்ற அவருடைய ஏக்கமும் என்னை வியப்பிலாழ்த்தின.

விடைபெறும் நேரத்தில் அவருடைய சந்திப்பின் நினைவாக வைத்துக் கொள்ளும்படி ஒரு விலையுயர்ந்த பேனாவை எனக்களித்தார். அன்பைத் தவிர வேறு எதையும் எவரிடத்தும் நான் பெறுவதில்லை என்று மறுத்துவிட்டேன். 'ஒரு புத்தகத்தையாவது பெற்றுக் கொள்ளுங்கள்' என்று சொல்லி ஐயா முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்று நூலை வழங்கினார். வெளிப்பூச்சு இல்லாத பாசாங்கற்ற அறிவார்ந்த ஒரு கலைஞனை அன்று நான் சந்தித்தேன். பொய்மையும், போலித்தனமும் மலிந்த அரசியலிலிருந்து முற்றாக நான் விலகிக் கொளவதாக வெளியிட்ட அறிக்கையை வாசித்த விவேக் ஒரு பேனாவைக் கூட அடுத்தவரிடம் இருந்து பெற மறுக்கும் ஒருவர் பொதுவாழ்விலிருந்து விலகுவதென்று எடுத்த முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்று ட்வீட் செய்ததுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விலகவேண்டாம் என்று வேண்டிக்கொண்டார்.

என் ஐம்பதாண்டுப் பொதுவாழ்வின் அனுபவங்களை 'ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கை அனுபவங்கள்' என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டேன். சென்ற ஆண்டு ஏப்ரலில் கரோனாவால் வீட்டில் முடங்கியிருந்த விவேக் என்னுடைய ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கையை வாசித்துக் கொண்டிருப்பதாகப் பதிவிட்டிருந்தார். தொலைபேசியில் தொடர்பு கொண்டு 'உங்களைப் போல் நூறு சதவிகிதம் வாழ முடியாமற் போனாலும் ஒரு பத்து சதவிகிதமாவது வாழ முயன்றாலே பெரிது' என்றார். கரோனாவின் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதும் நாம் அவசியம் சந்திக்க வேண்டும். உங்களோடு நிறையப் பேச வேண்டும் என்றார் விவேக்.

கருணையற்ற காலம் நொடிப் பொழுதில் அந்த அற்புதமான கலைஞனை, நெறி சார்ந்து வாழ்ந்த நல்லவனை, இயற்கையை நேசிக்க இனிய பண்புகள் கொண்டவனை, மனித நேயம் மிக்கவனை, சிரிக்கவைத்துச் சிந்தனையைத் தூண்டியவனை நம்மிடமிருந்து பறித்துக் கொண்டது. நகைச்சுவை நடிகர்களில் துருவ நட்சத்திரமாகத் துலங்கியவர் விவேக். சாதாரண மனிதர்களில் சரித்திரம் அவர்கள் சாவோடு முடிந்துவிடும். நண்பர் விவேக் ஒரு சாதாரண மனிதராக வாழவில்லை என்பதுதான் பொய்யின் நிழல் படாத உண்மை." இவ்வாறு ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

actor Vivek Tweets tamilaruvi manian Gandhiya makkal iyakkam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe