Skip to main content

"விவேக் கொடுத்த அந்த பரிசு..." - தமிழருவி மணியன் நெகிழ்ச்சி!

Published on 21/04/2021 | Edited on 21/04/2021

 

gandhi makkal iyakkam chief tamilaruvimanian tweet actor vivek tributes

 

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு இரங்கல் தெரிவித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன், "விவேக்கும் நானும்...  ஓராண்டுக்கு முன்பு தனியார் இதழுக்கு விவேக் வழங்கிய நேர்காணலில் 'நம் மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு இல்லை. தமிழருவி மணியன் என்ற நேர்மையாளருக்கு என்ன அங்கீகாரத்தை இவர்கள் தந்து எந்தப் பதவியில் அமர்த்தி அழகுப் பார்த்தனர்? என்று கேட்டிருந்ததைக் கண்டு நான் வியந்தேன். அவருக்கும் எனக்கும் அன்று வரை நேரடித் தொடர்பு இருந்ததில்லை. நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி சொன்னேன். 

 

ஒருநாள் என்னைப் பார்த்துப் பேச என் வீட்டிற்கு வருவதாகச் சொன்னார். 'எதற்காக என்னைப் பார்க்க விரும்புகிறீர்கள்?' என்று கேட்டேன். அவருடைய வீட்டில் வாடகைக்குக் குடியிருந்த ஒரு எழுத்தாளர் காலி செய்ய மறுத்ததால் மன உளைச்சலுக்காளானவர் உறக்கமின்றி தவித்த நிலையில் அவரது நண்பர் ஒருவர் நான் எழுதிய 'மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்' என்ற நூலைப் படிக்கும் படிப் பரிந்துரைத்திருக்கிறார்.

 

ஐயா... 'அந்த எழுத்தாளரால் நான் நிம்மதியின்றித் தவித்தேன். அந்த நேரத்தில் உங்கள் நூலை நண்பர் சொன்னதால் வாசித்தேன். நான் தேடிய மன அமைதியை அந்த நூலை வாசித்ததால் பெற்றேன். ஒவ்வொரு இரவும் அந்த நூலை வாசிக்கிறேன். உங்களைப் பார்த்து பேச வேண்டும் என்ற ஆவல் என்னுள் அதிகரித்தது' என்றார் விவேக். 

 

ஒரு சிறிய குடியிருப்பில் பெரிய வசதிகளற்ற நிலையில் வாழும் நான் பிரபலங்களின் வருகையைத் தவிர்த்து விடுவது என் வழக்கம். அவர்கள் வருகை மூலம் என்னைப் பெருமைப் படுத்திக்கொள்ளும் மலினமான மனநோய் என்றும் எனக்கு இருந்ததில்லை. ரஜினிகாந்த் என் வீட்டிற்கு வர விரும்பிய போதும் நான் உடன்படவில்லை. விவேக்கை அவரது வீட்டில் நான் வந்துச் சந்திப்பதாகத் தெரிவித்தேன்.

 

ஒரு நாள் சாலிகிராமத்தில் உள்ள அவருடைய வீட்டிற்குச் சென்றேன். மனம் நெகிழ்ந்து வாசலில் நின்று வரவேற்றார். ஒருமணி நேரம் இருவரும் பேசினோம். அவருடைய பல்துறை அறிவாற்றலும், மனித நேயமும், சமூக நலனில் அவருக்கிருந்த உண்மையான அக்கறையும், தூய்மையான அரசியல் இந்த மண்ணில் மீண்டும் மலர வேண்டும் என்ற அவருடைய ஏக்கமும் என்னை வியப்பிலாழ்த்தின. 

 

விடைபெறும் நேரத்தில் அவருடைய சந்திப்பின் நினைவாக வைத்துக் கொள்ளும்படி ஒரு விலையுயர்ந்த பேனாவை எனக்களித்தார். அன்பைத் தவிர வேறு எதையும் எவரிடத்தும் நான் பெறுவதில்லை என்று மறுத்துவிட்டேன். 'ஒரு புத்தகத்தையாவது பெற்றுக் கொள்ளுங்கள்' என்று சொல்லி ஐயா முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்று நூலை வழங்கினார். வெளிப்பூச்சு இல்லாத பாசாங்கற்ற அறிவார்ந்த ஒரு கலைஞனை அன்று நான் சந்தித்தேன். பொய்மையும், போலித்தனமும் மலிந்த அரசியலிலிருந்து முற்றாக நான் விலகிக் கொளவதாக வெளியிட்ட அறிக்கையை வாசித்த விவேக் ஒரு பேனாவைக் கூட அடுத்தவரிடம் இருந்து பெற மறுக்கும் ஒருவர் பொதுவாழ்விலிருந்து விலகுவதென்று எடுத்த முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்று ட்வீட் செய்ததுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விலக வேண்டாம் என்று வேண்டிக்கொண்டார். 

 

என் ஐம்பதாண்டுப் பொதுவாழ்வின் அனுபவங்களை 'ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கை அனுபவங்கள்' என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டேன். சென்ற ஆண்டு ஏப்ரலில் கரோனாவால் வீட்டில் முடங்கியிருந்த விவேக் என்னுடைய ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கையை வாசித்துக் கொண்டிருப்பதாகப் பதிவிட்டிருந்தார். தொலைபேசியில் தொடர்பு கொண்டு 'உங்களைப் போல் நூறு சதவிகிதம் வாழ முடியாமற் போனாலும் ஒரு பத்து சதவிகிதமாவது வாழ முயன்றாலே பெரிது' என்றார். கரோனாவின் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதும் நாம் அவசியம் சந்திக்க வேண்டும். உங்களோடு நிறையப் பேச வேண்டும் என்றார் விவேக்.

 

கருணையற்ற காலம் நொடிப் பொழுதில் அந்த அற்புதமான கலைஞனை,  நெறி சார்ந்து வாழ்ந்த நல்லவனை, இயற்கையை நேசிக்க இனிய பண்புகள் கொண்டவனை, மனித நேயம் மிக்கவனை, சிரிக்கவைத்துச் சிந்தனையைத் தூண்டியவனை நம்மிடமிருந்து பறித்துக் கொண்டது. நகைச்சுவை நடிகர்களில் துருவ நட்சத்திரமாகத் துலங்கியவர் விவேக். சாதாரண மனிதர்களில் சரித்திரம் அவர்கள் சாவோடு முடிந்துவிடும். நண்பர் விவேக் ஒரு சாதாரண மனிதராக வாழவில்லை என்பதுதான் பொய்யின் நிழல் படாத உண்மை." இவ்வாறு ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  


 

சார்ந்த செய்திகள்

Next Story

விவேக் இல்லத் திருமணம்; அப்பாவின் கனவை நோக்கி மகள்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
vivek daughter marriage

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. பிரசன்னா குமார், அமிர்த நந்தினி மற்றும் தேஜஸ்வனி. இதில் பிரசன்னா குமார், மூளைக் காய்ச்சல் காரணமாக 2015 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில், மறைந்த விவேக்கின் மூத்த மகளான தேஜஸ்வினிக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. பரத் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

அப்போது மணமக்கள் இருவரும் மரக்கன்றுகள் மற்றும் மூலிகை பூச்செடிகள் நட்டனர். பின்பு வாழ்த்தியவர்களுக்கு மரக்கன்றை பரிசாக அளித்தனர். விவேக், முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வழியில் கிரீன் கலாம் என்ற திட்டத்தின் மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை கனவாக வைத்திருந்தார் என்பதும் அதில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

“விவேக், மனோபாலா, மயில்சாமி மூவருடனான நட்பு”  - அனுபவம் பகிரும் எம்.எஸ். பாஸ்கர்

Published on 24/08/2023 | Edited on 24/08/2023

 

M. S. Bhaskar Interview  -  Vivek - Manobala - Mayilsamy

 

தன்னுடைய திரையுலக மற்றும் வாழ்வியல் அனுபவங்கள் பலவற்றையும் நடிகர் எம்.எஸ். பாஸ்கர் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

நடிகர் விவேக் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் வேலை செய்துகொண்டிருந்தவர். என்னுடைய தம்பியும் அங்கு தான் வேலை செய்துகொண்டிருந்தார். கவிதாலயாவின் படங்களில் விவேக் நடித்தபோது நான் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக இருந்தேன். அப்போதே அவர் எனக்குப் பழக்கம். நான் வாய்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தபோது வாய்ஸ் எஃபெக்ட்டுகள் கொடுப்பவராக இருந்தவர் மயில்சாமி. மனோபாலாவும் எனக்கு நீண்ட கால பழக்கம். மயில்சாமி எனக்கு மிக நெருங்கிய நண்பன். மனோபாலாவை நான் அண்ணன் என்று தான் அழைப்பேன். 

 

என் மீது மனோபாலா மிகுந்த அன்போடு இருப்பார். மயில்சாமியை அடிக்கடி நான் சந்திப்பேன். சிவராத்திரி நிகழ்ச்சிக்கு வருகிறாயா என்று மயில்சாமி என்னை போனில் அழைத்தான். அன்று எனக்கு ஷூட்டிங் இருந்ததால் செல்ல முடியவில்லை. திடீரென்று அவன் இறந்துவிட்டான் என்கிற செய்தி வந்தது. என்னால் நம்ப முடியவில்லை. விவேக்கின் மரணமும் அப்படியானது தான். மனோபாலா அண்ணன் கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். ஆனாலும் அவர் இறந்துபோவார் என்று நினைக்கவில்லை. என்னுடைய நெருங்கிய நண்பன் தினகரனும் சமீபத்தில் இறந்தான். 

 

என்னுடைய நண்பர்கள் பற்றியோ, நான் செய்யும் தானங்கள் பற்றியோ எதுவுமே தெரியாதவர்கள் என்னைப் பற்றி செய்யும் விமர்சனங்கள் அவர்களுடைய அறியாமையைத் தான் காட்டுகிறது. நான் பணம் கொடுக்கமாட்டேன் என்பது உண்மைதான். ஒருமுறை சுகர் மாத்திரை வாங்கப் பணம் வேண்டும் என்று உணவகத்தில் ஒருவர் கேட்டார். நான் நூறு ரூபாய் கொடுத்தேன். அதை எடுத்துக்கொண்டு நேராக அவர் டாஸ்மாக் சென்றார். அதிலிருந்து நான் பணமாக யாரிடமும் கொடுப்பதில்லை. மாத்திரை வேண்டுமென்றால் மருந்தகத்துக்கு அழைத்துச் சென்று நானே வாங்கித் தருவேன்.

 

சம்பாதிக்கும் அனைத்தையும் வாரிக் கொடுக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஒரு இயக்குநரின் இரண்டு படங்களில் அருமையான காட்சிகள் செய்திருந்தேன். அந்த இரண்டு காட்சிகளையும் அவர் வெட்டிவிட்டார். அது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. தெரிந்த ஒருவரிடம் நம்பி 5 லட்ச ரூபாயை அவருடைய வியாபாரத்துக்காக கொடுத்தேன். இன்று வரை அவர் திருப்பித் தரவில்லை. தரக்கூடிய நிலையில் அவர் இல்லை. கேட்டுக் கேட்டுப் பார்த்து விட்டுவிட்டேன். இனி உஷாராக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். வாழ்க்கையில் எது கிடைத்தாலும் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை என்கிற மனநிலைக்கு நாம் வந்துவிட வேண்டும்.