Gambling by WhatsApp group; gang Arrest

Advertisment

மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவு நேரங்களில் ஏராளமானோர் ஒன்று சேர்ந்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனாவுக்கு தகவல் கிடைத்ததன் பேரில், மயிலாடுதுறைதனிப்படை போலீசார் பதினான்கு பேரை அதிரடியாக கைதுசெய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே அஞ்சார்வார்த்தலை கிராமத்தில் உள்ள ஏ.கே.பி. திருமண மண்டபத்தில் பலர் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஒன்று கூடியுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது, அங்கு அவர்கள் பணம் வைத்து சீட்டுக்கட்டு சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது அங்கிருந்து சிலர் சுவர் ஏறிக்குதித்து தப்பியோடினர். மீதமிருந்த 14 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5.15 லட்சம் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், 3 கார்கள் மற்றும் 16 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து, பிடிபட்ட 14 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், தப்பியோடிய சிலரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். விசாரணையில், மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள கடலங்குடி அரண்மனைத் தெருவைச் சேர்ந்த துரை மகன் சரவணன் (38) என்பவர் வாட்ஸ்-ஆப் குழு மூலம் மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நபர்களை இணைத்து, ஒவ்வொரு நாள் ஒவ்வொரு மாவட்டத்தில் இரவு நேரங்களில் பல லட்சம் ரூபாயை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதும், அவர்களில் பெரும்பாலானோர் காய்கறி வியாபாரம், உணவகம் வைத்து நடத்துபவர்கள் என்பதும், மயிலாடுதுறை மாவட்டத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டபோது போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது. மேலும், இந்த சம்பவத்துக்கு மயிலாடுதுறை காவல்துறையைச் சேர்ந்த சிலரும் உடந்தையாக இருந்துள்ளது தெரியவந்தது. சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு திருமண மண்டபத்தை வாடகைக்கு கொடுத்த உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரியவருகிறது.

Advertisment

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இரவு நேரங்களில் குழு அமைத்து சூதாட்டம் விளையாடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.