Skip to main content

நாகை மாவட்டத்தை புறட்டிப்போட்ட கஜா புயல்!! (படங்கள்)

Published on 16/11/2018 | Edited on 16/11/2018

 

வங்கக் கடலில் ஒருவாரமாக மிரட்டிக் கொண்டிருந்த கஜா புயல் பல்வேறு பில்டப்களோடு வேதாரண்யம் கடற்பகுதியில் கரையை கடந்துள்ளது.  

 

 நாகை, தஞ்சை, திருவாரூர்  உள்ளிட்ட மாவட்டங்களில்  நேற்று மாலைவரை வறண்டு காணப்பட்ட மேகம் திடீரென சூழ்ந்து  மழை பெய்ய தொடங்கியது. இரவு பத்துமணிக்கு மேல் படிப்படியாக மழையின் அளவு அதிகரித்துக்கொண்டே இருந்தது. 

 

காற்றும் விட்டு விட்டு வீசத்துவங்கியது. மின்சாரங்கள் முழுமையாக நிறுத்தப்பட்டன, கடைகளை வர்த்தகர்களே முன்வந்து 9 மணிக்கு மேல் பூட்டிவிட்டனர். பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. டெல்டா மாவட்டங்களே ஊரடங்கு உத்தரவிட்டது போல காட்சியளித்தது. மழையின் வேகம் அதிகரித்து வீதிகளில் பெருக்கெடுத்தது. 11 மணிக்கு மேல் காற்றின் வேகம் அதிகரித்தது.

 

இரவு 12 மணிக்கு  மேல் அதிக  காற்று வீசி பீதியில் ஆழ்த்தியது பிறகு அதிகாலை 2.30 மணியளவில் புயல் கரையை கடந்தது. அப்போது 120 கி.மீ வேகத்தில் பலத்தகாற்று வீசியது. காற்றின் வேகத்தால் பல இடங்களில் மரங்கள் முறிந்து வீதிகளிலும்,  வீட்டின் மீீதும், மின்கம்பங்கள் மீதும் விழுந்தது.

 

ஆனாலும் விடிந்து 8 மணிக்கு புயல் காற்றின் வேகம் குறையாமல் காணப்பட்டது. பேரிடர் மீட்பு பணியினர் பாதிப்புகளுக்கு உள்ளான இடங்களுக்கு விரைந்து சென்று சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்திவருகின்றனர். அவர்களோடு சமுக ஆர்வளர்களும், பொதுமக்களும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

 

நாகப்பட்டினம் எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதலுடன் கூடிய உதவிகளை செய்து வருகிறனர்.  அவரோடு அவரது கட்சியினரும் வேதாரண்யம் பகுதியில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

புயல் குறித்து வேதாரண்யம் பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவரிடம் பேசினோம், " ஐந்து நாட்களுக்கு மேலாக எங்களை பீதியாக்கிக்கொண்டிருத கஜாபுயல் ஒருவழியாக பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டே கரையை கடந்து இருக்கிறது. குடிசைகள் முழுவதும் காற்றில் சூறையாடப்பட்டுவிட்டன.  மரங்கள் முழுவதும் முறிந்துவிட்டது.  இதை அப்புறப்படுத்துவதற்கே  இரண்டு மூன்று நாட்கள் பிடிக்கும். மின்சாரம் முழுவதும் துண்டிக்கப்பட்டுவிட்டது.  ஏற்கனவே விவசாயம் பாழ்பட்டு போய்கிடக்கிறது. இன்னும் நாங்கள் படகுகளை பார்கவில்லை, எத்தனை படகுகள் புயலால் சேதமாகியிருக்கிறது என்பது தெரியல, வருஷா வருஷம் மழையும் வருது புயல் அடிக்கிறது, எங்க வாழ்க்கையில பஞ்சமும் வந்துக்கிட்டுதான் இருக்கு." என்றார் கலங்கிய குரலுடன்.

 

இப்படி கஜா புயல் ஒரு நாகை மாவட்டத்தை  புரட்டிப் போட்டு விட்டது என்றே கூறவேண்டும்.

சார்ந்த செய்திகள்